உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / ஓராண்டில் ரூ.8.76 கோடி விளைபொருட்கள் விற்று சாதனை; தமிழகம் முழுவதும் 1566 விவசாயிகள் பயன்

ஓராண்டில் ரூ.8.76 கோடி விளைபொருட்கள் விற்று சாதனை; தமிழகம் முழுவதும் 1566 விவசாயிகள் பயன்

மதுரை : மதுரை மாவட்டத்தில் கடந்தாண்டு ஏப்ரலில் துவங்கிய தேசிய மின்னணு வேளாண் சந்தை (இ - நாம்) மூலம் ஓராண்டில் விளைபொருட்கள் ரூ.8.76 கோடிக்கு விற்கப்பட்டுள்ளது.மதுரை, மேலுார், உசிலம்பட்டி, வாடிப்பட்டி, திருமங்கலத்தில் வேளாண் வணிகத்துறையின் கீழ் உள்ள வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகளின் விளைபொருட்கள் இ - நாம் முறையில் விற்பனை செய்யப்படுகிறது. ஓராண்டு முடிவில் தமிழகம் முழுவதிலும் இருந்து 1566 விவசாயிகள் இதன் மூலம் பயன் பெற்றுள்ளனர் என்கிறார் விற்பனைக்கூட கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது: அரிசி, சிறுதானியம், மஞ்சள், மூலிகை உட்பட 56 வகையான 2872 டன் அளவுள்ள வேளாண் விளைபொருட்களை விற்பனை செய்துள்ளோம். 25 மாவட்ட விவசாயிகள், 32 மாவட்ட வியாபாரிகள் பயன்பெற்றனர். எல்லா மாவட்டத்திலும் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் இருந்தாலும் பாரம்பரிய நெல் ரகம், சிறுதானியங்களுக்கு திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் பெயர் பெற்றது.கருப்பு கவுனி, பூங்கார், மாப்பிள்ளை சம்பா, ரத்தசாலி, நவரா, குள்ளங்காரு, ஆத்துார் கிச்சிலி சம்பா, தங்கச்சம்பா, சூரிமட்டை, சிவப்பு கவுனி, கருங்குறுவை, குழி வெறிச்சான், காட்டுயானம், சித்ரக்கார், நொறுங்கன் உட்பட 24 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிடும் பிற மாவட்ட விவசாயிகளும் இங்கு நடைபெறும் இ - நாம் ஏலத்தில் இணையதளத்தின் மூலம் பங்கேற்கின்றனர். வியாபாரிகள் போட்டி போட்டு விலையை அதிகரிப்பதால் விளைபொருளுக்குரிய விலையும் விவசாயிகளுக்கு கூடுதலாக கிடைக்கிறது.குதிரைவாலி, வரகு, சாமை, திணை, கேழ்வரகு, பனிவரகு, கம்பு மதுரையில் சாகுபடியாகிறது. அதற்கும் நல்ல வரவேற்பு உள்ளது. கடந்தாண்டு ஏலம் துவங்கிய போது கருப்பு கவுனி நெல் கிலோ ரூ.35க்கு விற்கப்பட்டது. வியாபாரிகள் அதிகரித்ததால் தற்போது கிலோ ரூ.85 வரை விற்பனையாகிறது. விவசாயிகள் பாரம்பரிய நெல் ரகங்களை பயிரிட்டால் நல்ல லாபம் கிடைக்கும்.தென்தமிழகத்தில் இ - நாம் முறையில் நாம் சிறந்து விளங்குகிறோம். மூலிகையில் அவுரி, ஆவாரம்பூ, கருமஞ்சள், கஸ்துாரி மஞ்சள், நெருஞ்சி, குப்பைமேனி, முருங்கைஇலை, கற்றாழையை ஆகியவற்றை இலையாகவும், மதிப்பு கூட்டியும் விற்பனை செய்து தருகிறோம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ