| ADDED : ஏப் 12, 2024 05:05 AM
திருமங்கலம்: கப்பலுாரில் விதிமீறி அமைக்கப்பட்ட டோல்கேட்டை அகற்றக்கோரி ஏப்.,16ல் திருமங்கலம் பகுதியில் கடையடைப்பு நடக்கிறது.திருமங்கலம்,கப்பலுார் பகுதி மக்கள் பல ஆண்டுகளாக டோல்கேட்டால்அவதிக்குள்ளாகி வருகின்றனர். ஒவ்வொரு முறை டோல்கேட்டை கடக்கும் போதும் வாகன ஓட்டிகளுக்கும், சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் வாக்குவாதம் நடப்பது வழக்கம். இதனால் கட்டண விலக்கு அளிக்கப்படும் என அதிகாரிகள் அரசியல்வாதிகள் சமாதானம் செய்வர்.ஆனால் சில நாட்களிலேயே மீண்டும் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தகராறு ஏற்படும். திருமங்கலம் பகுதி மக்கள் இக் கட்டண விலக்கை பயன்படுத்தி செல்லும்போது, பல மாதங்கள் கழித்து பாக்கி தொகை செலுத்தவில்லை என வாகன உரிமையாளர்களுக்கு டோல்கேட் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்புவதும் வாடிக்கை. எனவே இந்த பகுதி மக்கள்மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்.இந்த டோல்கேட்டை அகற்ற வலியுறுத்தி பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு உதவாத மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஏப்.,16ல் திருமங்கலம் பகுதியில் கடையடைப்பு போராட்டம் நடத்துவது என திருமங்கலம் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவினர் முடிவு செய்துள்ளனர்.கடையடைப்புக்கு திருமங்கலம் பகுதி மோட்டார் வாகனங்கள், நகர் வியாபாரிகள், காய்கறி வியாபாரிகள், ஓட்டல், நகைக்கடை, எலக்ட்ரிக்கல் கடை உரிமையாளர்கள் என 20-க்கும் மேற்பட்ட சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன.