| ADDED : ஆக 01, 2024 05:05 AM
மதுரை: மதுரையில் நடந்து வரும் மேம்பாலம், ரோடு பணிகளை குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கும்படி நெடுஞ்சாலைத்துறை தலைமைப் பொறியாளர் சத்யபிரகாஷ் உத்தரவிட்டார்.மதுரையில் தமிழக நெடுஞ்சாலைத் துறை சார்பில் பல்வேறு இடங்களில் பாலம், ரோடு பணிகள் நடந்து வருகின்றன. கோரிப்பாளையம் சந்திப்பில் ரூ.177 கோடியில் மேம்பாலம், மேலமடை சந்திப்பில் ரூ.150 கோடியில் மேம்பாலம், அரசரடியில் ரூ.5 கோடியில் ரவுண்டானா, வைகை வடகரையில் ரூ.120 கோடியில் புதிய ரோடு அமைக்கப்பட உள்ளது.இதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமடைந்துள்ளன. கோரிப்பாளையம் சந்திப்பில் பாலத்திற்கான துாண்கள் அமைக்கும் பணி நடக்கிறது. மேலமடையில் வண்டியூர் கண்மாய்க்கரை சுவர் கட்டும் பணி நடக்கிறது. அரசரடியில் ஜெயில் ரோடு, மின்வாரியம் பகுதியில் ரோடு அகலப்படுத்தப்பட உள்ளது. இதற்காக நிலம் தேவைப்படுகிறது. அதனைப் பெறும் முயற்சியில் நெடுஞ்சாலைத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.வைகை வடகரையில் காமராஜ் பாலம் முதல் சமயநல்லுார் வரை 8 கி.மீ.,க்கு திட்டமதிப்பீடு தயாரிக்கப்பட்டு டெண்டர் விடுவதற்கான ஏற்பாடுகள் நடக்கின்றன. இப்பணிகளை மாநில தலைமை பொறியாளர் கே.ஜி.சத்யபிரகாஷ் நேற்று நேரில் பார்வையிட்டார். பணிகளை விரைந்து மேற்கொண்டு குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கும்படி உத்தரவிட்டார்.அவருடன் கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்டப்பொறியாளர் மோகனகாந்தி, உதவி கோட்டப்பொறியாளர்கள் சுகுமார், ஆனந்த், சீத்தாராமன், சார்லஸ், குருபிகாஷ், தரக்கட்டுப்பாடு பொறியாளர் மைதிலி உதவிப்பொறியாளர் வெங்கடேஷ்பாபு உட்பட பலர் உடன்சென்றனர்.