உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சென்னைக்கு இணையாக தென்மாவட்ட போலீசார் விசாரணைக்கு வசதி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு மாற்றாந்தாய் மனப்பான்மை பின்பற்றப்படுகிறது என கருத்து

சென்னைக்கு இணையாக தென்மாவட்ட போலீசார் விசாரணைக்கு வசதி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு மாற்றாந்தாய் மனப்பான்மை பின்பற்றப்படுகிறது என கருத்து

மதுரை : தென் மாவட்டங்களிலுள்ள போலீஸ் விசாரணை அமைப்புகள் பயனுள்ள விசாரணை மேற்கொள்ள, சென்னைக்கு இணையாக போதிய உபகரணங்கள் வழங்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.சென்னையை சேர்ந்த டாக்டர் பிரியா பிஸ்வ குமார் மருத்துவம் சார்ந்த ஒரு வணிகத்தில் ஈடுபட்டார். இவரிடம் ரூ.4.5 கோடியை வங்கி பரிமாற்றத்தின் மூலம் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக சிலர் மீது மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 2023 ல் வழக்கு பதிந்தனர்.பிரியா பிஸ்வ குமார், 'விசாரணையில் முன்னேற்றம் இல்லை. விசாரணை நடத்துவதற்கு தேவையான வசதிகள் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் இல்லை. வழக்கின் விசாரணையை சென்னை நகர குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றி உத்தரவிட வேண்டும்,' என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தார்.நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.மனுதாரர் தரப்பு: ஒருவர் மூலம் மனுதாரரிடமிருந்து பணத்தைப் பெற்று, பின் வேறு சிலரின் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது. ஒருவர் பணத்தை ஆன்லைன் விளையாட்டிற்கு மாற்றினார். அங்கிருந்து பணம் அவரது வங்கி வங்கிக் கணக்கிற்கு மாற்றப்பட்டது.25 மாற்று வங்கி கணக்குகளைப் பயன்படுத்தி, அந்நியச் செலாவணி வர்த்தகத்திலும் பணம் முதலீடு செய்யப்பட்டது. அந்நியச் செலாவணி வர்த்தகம் மற்றும் ஆன்லைன் விளையாட்டில் செய்யப்படும் பரிவர்த்தனைகள் தொடர்பாக விசாரிக்கும் நிபுணத்துவம் மதுரை மாவட்ட குற்றப்பிரிவு போலீசாரிடம் இல்லை. போதிய உள்கட்டமைப்பு வசதி இல்லை. இதனால் முறையாக விசாரணை நடத்த முடியாது. அனைத்து வசதிகளும் சென்னை நகர குற்றப்பிரிவு அலுவலகத்தில் மட்டுமே உள்ளன. இவ்வழக்கை சென்னைக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு தெரிவித்தது.நீதிபதி: இவ்வழக்கை விசாரிக்க நிபுணத்துவம் தேவை. மனுதாரர் கூறுவதுபோல் இதுபோன்ற குற்றங்களை விசாரிக்க தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் மதுரையில் போதுமானதாக இல்லை.தென் மாவட்டங்களில் 2021 ஏப்.,21 முதல் 2024 ஜூன் 30 வரை நிதி மோசடிகள் தொடர்பாக 25 ஆயிரத்து 775 வழக்குகள் பதிவாகியுள்ளன.சென்னைக்கு மட்டும் அதிக முக்கியத்துவம் கொடுத்து, பிற மாவட்டங்கள், குறிப்பாக தென் மாவட்டங்களில் போலீஸ் விசாரணை அமைப்புகளுக்கு உள்கட்டமைப்புகள் ஏற்படுத்துவதில் அல்லது திட்டங்களை வழங்குவதில் மாற்றாந்தாய் மனப்பான்மை பின்பற்றப்படுகிறது.போதிய வசதிகள் செய்யாமல், தரமான விசாரணையை எதிர்பார்க்க முடியாது. சென்னையிலுள்ள சைபர் பிரிவு மற்றும் தடயவியல் ஆய்வகத்திற்கு கருவிகள் வழங்கப்பட்டுள்ளன. அவ்வசதிகளில் 1 சதவீதம்கூட மற்ற மாவட்டங்களுக்கு வழங்கப்படவில்லை. இது துரதிர்ஷ்டவசமானது. அரசு ஒரு பிரிவினரை மாறுபட்டு நடத்த முடியாது. அரசு அனைத்து குடிமக்களுக்குமானது. தற்போதைய சூழ்நிலையில், தென் மண்டலத்தைச் சேர்ந்த விசாரணை அதிகாரி, சைபர் குற்றத்தில் திறம்பட உதவி பெற, சென்னையிலுள்ள ஒரு அதிகாரியை சார்ந்திருக்க வேண்டும். தென்மாவட்டங்களில் உள்ளவர்களும் இம்மாநிலத்தின் குடிமக்கள். இங்கு பயனுள்ள விசாரணைக்கு உரிமை உள்ளது.மதுரை மாவட்ட குற்றப்பிரிவிலுள்ள இவ்வழக்கை சென்னை மத்திய குற்றப்பிரிவு-சைபர் கிரைம் போலீசாரிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்கள் விரைவில் விசாரித்து முடிக்க வேண்டும்.தென் மாவட்டங்களிலுள்ள போலீஸ் விசாரணை அமைப்புகள் பயனுள்ள விசாரணை மேற்கொள்ள, சென்னைக்கு இணையாக போதுமான உபகரணங்கள் வழங்கப்படுவதை தமிழக உள்துறை செயலர், டி.ஜி.பி., உறுதி செய்ய வேண் டும். குறைந்தபட்சம், மண்டல அளவில் தேவையான உள்கட்டமைப்புகள் வழங்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி