| ADDED : ஜூலை 10, 2024 04:21 AM
மதுரை : ''திருவிளையாடல் புராணத்தை நாடக வடிவில் வெளியிட வேண்டும்,'' என, மதுரையில் திருவிளையாடல் புராண ஆராய்ச்சி மையம் சார்பில் நடந்த மாணிக்கவாசகர் குருபூஜை விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி பேசினார்.பேரையூர் பராசக்தி கல்லுாரி குழும தாளாளர் ஜெகதீசன் தலைமை வகித்தார். மைய திண்டுக்கல் மாவட்ட பொறுப்பாளர் வெள்ளைச்சாமி வரவேற்றார்.நீதிபதி ஸ்ரீமதி பேசியதாவது: திருவிளையாடல் புராணம் குறித்து மையம் சார்பில் வெளியிட்ட புத்தகத்தை படித்தபோது தான் இவ்வளவு விஷயங்கள் உள்ளதா என வியந்தேன். இப்புராணத்தை நாடக வடிவில் குழந்தைகளை வைத்து இயக்கி அதை யுடியூப் போன்ற தளங்களில் வெளியிடுங்கள். நான் படித்த காலங்களில் நன்னெறி வகுப்புகள் இருந்தன. பிறகு அது காணாமல் போனது.இம்மையம் சார்பில் 3 நன்னெறி வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டு, இன்று 100 வகுப்புகளாக பெருகியுள்ளன. இந்தியாவில் மட்டும் தான் ஒரு பக்தன் இறைவனோடு விளையாடுவான். இறைவனும் பக்தனோடு விளையாடுவான் என்றார்.திருவிளையாடல் புராணப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை நீதிபதி, அமைப்பாளர் சங்கரநாராயணன் வழங்கினர். பட்டிமன்ற பேச்சாளர் ராஜ்குமார், மைய தலைவர் சந்திரசேகரன், நிர்வாகிகள் கண்ணன், சரவணன், தனலட்சுமி, நன்னெறி வகுப்புகள் தலைவர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஓய்வு பெற்ற பேராசிரியர் ரவி ஒருங்கிணைத்தார். அவனியாபுரம் பகுதி செயலாளர் கார்த்திக் பெருமாள் நன்றி கூறினார்.