உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / சட்ட விரோத தொழில்களில் மனித கடத்தல் 2வது இடம்: நீதிபதி அனுராதா தகவல்

சட்ட விரோத தொழில்களில் மனித கடத்தல் 2வது இடம்: நீதிபதி அனுராதா தகவல்

மதுரை, : 'உலகளவில் சட்ட விரோதமாக பணம் ஈட்டும் தொழில்களில் மனித கடத்தல் 2வது இடத்தில் உள்ளது'' என, மாவட்ட குடும்பநல நீதிபதி அனுராதா பேசினார்.சட்டப்பணி ஆணைக்குழு சார்பில், மனித கடத்தல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மதுரை லேடி டோக் கல்லுாரியில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ஹேமமாலா, கல்லுாரி முதல்வர் பியூலா ஜெயஸ்ரீ, சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலாளர் ராஜமகேஷ், டி.எஸ்.பி., ராதாகிருஷ்ணன் பங்கேற்றனர்.நீதிபதி அனுராதா பேசியதாவது: உலகில் அதிக அளவில் சட்ட விரோதமாக பணம் ஈட்டும் தொழிலாக போதைப் பொருட்கள் விநியோகம் முதல் இடத்திலும், மனித கடத்தல் 2வது இடத்திலும் உள்ளது. இதற்கான காரணம் வறுமையும், அறியாமையுமே.மனித கடத்தல் என்றால் பலர் ஒருவரை கடத்தி பணம் கேட்டு மிரட்டுவது என நினைக்கின்றனர். கடத்தலில் இருந்து மனித கடத்தல் வேறுபடும். அறையை விட்டு வெளியே வரவிடாமல், ஒருவரை கட்டாயப்படுத்தி கொடுமையான வேலைகளை நடத்தி செல்வதும் கடத்தல்தான்.பிறந்த குழந்தைகளை ஏன் கடத்துகின்றனர் என பலருக்கு தெரியாது. கடத்தும் நபர் அவர்களை பிச்சை எடுக்க வைப்பது, பாலியல் முறையில் கொடுமை செய்வது, உறுப்புகளை திருடி விற்பது என அவர்களின் வாழ்க்கை முறையை தீர்மானிக்கின்றனர்.பல்வேறு வயதில் பல காரணங்களுக்காக கடத்தல் நடக்கிறது. சிறுவயது குழந்தைகள் அறியாமையால் கடத்தப்படுகின்றனர். சற்று அதிகவயதில் எதிர் பாலினத்தவர் ஈர்ப்பால் மயங்கி, அவர்கள் எதற்காக நம்மிடம் பழகுகின்றனர் என தெரியாமல் ஏமாறுகின்றனர். காதலித்து திருமணம் செய்வதாக சொல்லி ஏமாற்றி கடத்துவதும் நடக்கத்தான் செய்கிறது.பாலியல் வழியில் கடத்தல் செய்வது உலகளவில் 50 சதவீதமாக உள்ளது. இந்தியாவில் மேற்கு வங்கம், குஜராத், ராஜஸ்தானில் அதிகளவில் கடத்தல் நடக்கிறது. இதனை தடுக்க நாம் அனைவரும் குரல் எழுப்பவேண்டும். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என விழிப்புடன் இருக்க வேண்டும். அசம்பாவிதம் ஏதேனும் நடப்பதாக அறிந்தால் தைரியமாக வெளியே சொல்ல வேண்டும். இதனை அனைவரும் கடமையாக நினைக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை