உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாச்சு உடல்தான தேவையும் அதிகமாச்சு

 மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாச்சு உடல்தான தேவையும் அதிகமாச்சு

மதுரை: மதுரை அரசு மருத்துவக் கல்லுாரி எம்.பி.பி.எஸ்., மாணவர்களின் சேர்க்கை 250 ஆக அதிகரிக்கப்பட்டதால் அவர்களின் முதலாமாண்டு அனாடமி படிப்பிற்காக உடல் தானம் அதிகமாக தேவைப்படுகிறது. இரண்டாண்டுகளில் 85 பேரின் உடல் தானமாக பெறப்பட்டு மருத்துவக் கல்லுாரிக்கு வழங்கப்பட்டுள்ளது. இங்கிருந்து மதுரையைச் சுற்றியுள்ள தென்மாவட்ட அரசு மருத்துவக் கல்லுாரிகளுக்கும் அனாடமி படிப்பிற்காக அனுப்பப்படுவதால் உடல்தான தேவை அதிகரித்து வருகிறது என்கிறார் நிலைய மருத்துவ அலுவலர் சரவணன். அவர் கூறியதாவது: உயிரோடு இருக்கும் போதே கண்தானம் செய்வது போல உடல் தான ஒப்பந்தம் செய்ய முடியும். உடல்தானம் செய்தவர் இறந்தபின் குடும்ப உறுப்பினர்கள் மருத்துவமனைக்கு தெரிவிக்க வேண்டும். இறப்பிற்கான காரணம் குறித்து பதிவு பெற்ற டாக்டரிடம் இறப்புச் சான்றிதழ் வாங்குவது அவசியம். அவரவர் மத சடங்குகளை முடித்தபின் உடலை அரசு மருத்துவக் கல்லுாரியில் காலை 7:00 முதல் மதியம் 2:00 மணிக்குள் நேரடியாக ஒப்படைக்கலாம். அதற்கு மேல் என்றால் அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலரிடம் தெரிவித்தால் அதற்கென உள்ள தனியறையில் உடல் பாதுகாக்கப்பட்டு மறுநாள் மருத்துவக் கல்லுாரியில் ஒப்படைக்கப்படும். மருத்துவமனையில் இருந்து உடல்தானம் குறித்த பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். வயது வரம்பின்றி யாரும் உடல்தானத்திற்கு பதிவு செய்யலாம். சிலர் தங்களது விருப்பத்தை தெரிவித்த நிலையில் பதிவு பண்ணாமல் இறந்தாலும், குடும்ப உறுப்பினர்கள் முன்வந்து உடலை தானமாக கொடுக்கலாம் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ