பஸ் டெப்போவுக்குள் ஊழியர்கள் போராட்டம்
மதுரை; மதுரை புதுார் அரசு போக்குவரத்துக் கழக ஊழியர்களை இடமாறுதல் செய்ததால் டெப்போவில் அமர்ந்து சக ஊழியர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். போக்குவரத்து கழகத்தில் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. பஸ்களை இயக்க டிரைவர், கண்டக்டர்கள் 'அவுட்சோர்ஸிங்' முறையில் சமீபத்தில் பணியில் சேர்த்தனர். தினக்கூலியாக தினமும் ரூ.700 வழங்கப்படுகிறது. இப்பணிக்கு ரூ.20 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை டெபாசிட் செலுத்தியுள்ளனர். இதில் ஆளுங்கட்சி தொழிற்சங்கத்தினரும், அதிகாரிகளும் பலன் பெற்றதாக புகார் கிளம்பியது. இவ்வாறு சேர்ந்தவர்கள் ஒரு மாதத்திற்கும் மேலாக பணியாற்றியுள்ளனர். இந்நிலையில் புதுார் டெப்போவில் திடீரென 8 ஊழியர்களை சேலம், விருதுநகர் என பிற ஊர்களுக்கு இடமாறுதல் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதில் அதிருப்தி அடைந்த ஊழியர்கள் பஸ்களை மறித்து, டெப்போவுக்குள் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். போலீசார் சமாதானம் செய்தனர். அவர்கள் கூறியதாவது: டெபாசிட் பெற்று தினக்கூலியாக பணியில் சேர்த்தனர். திடீரென வாய்மொழியாக வேறு டெப்போக்களுக்கு அனுப்புகின்றனர். அங்கு போய் கேட்டால் இங்கு இடமில்லை என்கின்றனர். எங்களைப் போன்ற பணியாளர் பலரை பணியில் இருந்து நீக்கியும் உள்ளனர். எங்களுக்கு இடையூறின்றி பணிசெய்ய விட்டால் போதும், என்றனர்.