மதுரை: ''காணும் கனவுகள் கூட பிரமாண்டமாக இருக்க வேண்டும்; சிறிய கனவுகள் காண்பது அவமானம்'' என மதுரையில் நடந்த பெண் தொழில் முனைவோர் (வீ) மாநாட்டில் பட்டிமன்ற பேச்சாளர் பாரதிபாஸ்கர் பேசினார். வீ தலைவர் ராஜகுமாரி ஜீவகன் வரவேற்றார். தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன், 'யெஸ்' அமைப்பு தலைவர் நீதிமோகன் முன்னிலை வகித்தனர். ஆப்பரேஷன் சிந்துாரை வழிநடத்திய கர்னல் பூனம் தேவ்கன், இசையமைப்பாளர் ரமேஷ் விநாயகம், பாடகர் பெபின், பட்டிமன்ற பேச்சாளர் பாரதிபாஸ்கர் ஆகியோருக்கு துறை சார்ந்த விருதுகள் வழங்கப்பட்டன. ரமேஷ் விநாயகம் பேசுகையில், ''ஒவ்வொருவரும் தன்னை உணரக் கூடிய சந்தர்ப்பத்தை அறிந்து நம்மை நாமே உயர்த்திக் கொள்ள வேண்டும். சிந்தனை, செயல், திறமை அனைத்தும் ஆண், பெண்ணுக்கு சமமாக உள்ளது. உங்களை நீங்களே புரிந்துகொள்ள வேண்டும்'' என்றார். பாரதி பாஸ்கர் பேசியதாவது: சீனாவில் ஆரம்பநிலை பணிகளில் ஆண், பெண் சமமாக வேலை செய் கின்றனர். அதேபோல பெரிய பதவிகளில் உயர்வு பெறுகின்றனர். இந்தியாவில் 22 முதல் 24 சதவீத பெண்கள் வீட்டை விட்டு வெளியே வந்து வேலை செய்கின்றனர். ஐ.டி., உட்பட பல்வேறு நிறு வனங்களின் ஆரம்ப நிலை பணிகளில் பெண்கள் 60 சதவீதம், ஆண்கள் 40 சதவீதம் பேராக உள்ளனர். அதற்கடுத்த நிலையில் உயரும் போது 70 சத வீதம் ஆண்கள், பெண்கள் 30 சதவீதமாக விகிதம் மாறுகிறது. தலைமை உட்பட முதன்மையாக பணிகளில் 94 சதவீதம் பேர் ஆண்களாகவும் 6 சதவீதம் மட்டுமே பெண்களாகவும் இருக்கின்றனர். பெண்கள் முன்னேற தகுதி, திறமை, உழைப்பு எதுதான் இல்லை. கனவு களை காணும் போது கூட பிரமாண்டமாக கனவு காண வேண்டும். சிறிய கனவுகளை காண்பது அவமானம் தான். எனவே பெண்கள், அதிகாரங்களில் உட்காரும் போது தான் நமக்கான முடிவுகளை நாம் எடுக்க முடியும் என்றார். வீ நிர்வாகிகள் மகேஸ்வரி, லதா, சித்ரா, ப்ரீதா, வளர், ஈஸ்வரி, பரமேஸ்வரி, சுசீலா ஏற்பாடுகளை செய்தனர்.