ஓடைகளில் தொடரும் நீர்வரத்து விவசாயிகள் மகிழ்ச்சி
உசிலம்பட்டி : உசிலம்பட்டி பகுதியில் ஓடைகளில் ஊற்று நீர்வரத்து காரணமாக கண்மாய்களுக்கு தண்ணீர் வருகிறது. நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.உசிலம்பட்டி பகுதியில் 15 ஆண்டுகளுக்கு பின்பு இந்த ஆண்டு சரியான பருவத்தில் மழைப்பொழிவு கிடைத்துள்ளது. அசுவமாநதி தடுப்பணை, கருக்கட்டான்பட்டி, மாதரை, உசிலம்பட்டி, நல்லுத்தேவன்பட்டி கண்மாய்கள் நிரம்பியுள்ளன. தொடர்ந்து அசுவமாநதி, வெள்ளிமலை ஓடை, உச்சிகண்ணம்பட்டி ஓடை, வேம்படியான்கோயில் ஓடை, பல்வேறு சிற்றோடைகளிலும் ஊற்று நீர் வரத்து தொடர்கிறது.மழை பெய்து ஒருவாரம் கடந்த நிலையிலும் இந்த ஓடைகளில் வரும் நீரின் காரணமாக கீரிபட்டி, திம்மநத்தம், சுழிஒச்சான்பட்டி போன்ற கண்மாய்களுக்கு நீர் கிடைத்து வருகிறது. இந்த ஆண்டும் 58 கிராம கால்வாய் மூலம் வைகை அணையில் இருந்து தண்ணீர் கிடைத்தால் உசிலம்பட்டி பகுதி செழுமையான பகுதியாக மாறும் என விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.