| ADDED : டிச 28, 2025 06:05 AM
பேரையூர்: பேரையூர் தாலுகா பகுதியில் கால்நடை தீவனம் விலை உயர்வால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர். விவசாயம் சார்ந்த இத்தாலுகாவில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மானாவாரி நிலங்கள் உள்ளன. விவசாயிகள் சாகுபடி பணியுடன், கால்நடை வளர்ப்புக்கும் முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். ஆடு, மாடுகள் வளர்த்து வருவாய் ஈட்டி வருவதில் ஆர்வம் காட்டுகின்றனர். இந்நிலையில் கால்நடை தீவனங்கள் அனைத்தும் விலை உயர்ந்து வருவதால் கால்நடைகளின் பராமரிப்புச் செலவும் தினசரி அதிகரித்து வருவதாக விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். கடந்தாண்டு கிலோ ரூ. 65க்கு விற்ற பருத்தி விதை, தற்போது ரூ.180 ஆக உயர்ந்து விட்டது. ஐம்பது கிலோ தவிடு ரூ. 300 ல் இருந்து ரூ. 650 ஆகவும், பிண்ணாக்கு ரூ. ஆயிரத்தில் இருந்து ரூ.1500 ஆகவும் அதிகரித்துள்ளது. இப்பகுதியில் அதிக அளவில் பால் உற்பத்தி செய்து ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு அனுப்பி வரும் விவசாயிகள், தீவன விலை உயர்வு காரணமாக கலக்கத்துடன், கால்நடை வளர்ப்பதா வேண்டாமா என புலம்பி வருகின்றனர்.