| ADDED : பிப் 01, 2024 07:27 AM
மதுரை : ''லோக்சபா தேர்தலில் பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் அ.ம.மு.க., இடம் பெறும்'' என, அக்கட்சியின் பொதுச் செயலாளர் தினகரன் கூறினார்.மதுரையில் அவர் கூறியதாவது: அ.ம.மு.க., கூட்டணி அமைக்க சில கட்சிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறோம். உறுதியான பின்பு சொல்வதே நாகரிகம். உறுதியாக வெற்றி முத்திரை பதிப்போம்.அ.ம.மு.க., - பா.ஜ., கூட்டணி என வதந்திகளுக்கு பதில் சொல்ல முடியாது. பிரதமரை தேர்வு செய்யும் கூட்டணியில் அ.ம.மு.க., இடம்பெறும். இல்லாதபட்சத்தில் தனித்து போட்டியிடும். அ.தி.மு.க., ஒன்றிணைவோம் என சசிகலா கூறிவருகிறார். பழனிசாமியோடு பயணிக்க அ.ம.மு.க., நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், எனக்கும் விருப்பம் இல்லை. ஜெயலலிதாவின் உண்மை தொண்டர்கள் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம்.அ.ம.மு.க.,வில் இருந்து 3 ஆண்டுகளாக பலர் வெளியேறினாலும் அவர்கள் பகுதியில் இயக்கம் வலுவாக உள்ளது. வரும் தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை. தி.மு.க.,வுக்கு எதிரான மன நிலையை, அறுவடை செய்ய பணி மேற்கொள் வோம்.ராமர் கோயில் உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் கட்டப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர். தமிழகத்தில் எப்படி என தேர்தலுக்கு பின் தெரியவரும். பா.ஜ., உட்பட எந்தக் கட்சியும் தாங்கள் வளர வேண்டும் என்றே நினைப்பர். அவர்கள் மக்கள் மனதில் இடம் பெறுவது தேர்தலில் தெரிந்துவிடும். இவ்வாறு அவர் கூறினார்.