கவின் ஆணவக்கொலையில் 2 மாதங்களில் இறுதி அறிக்கை; உயர்நீதிமன்றத்தில் அரசு தகவல்
மதுரை : திருநெல்வேலியில் கவின் ஆணவக் கொலை செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை, சி.பி.சி.ஐ.டி., போலீசார் 2 மாதங்களில் முடித்து இறுதி அறிக்கையை தாக்கல் செய்வர் என தமிழக அரசு தரப்பு உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்தது. துாத்துக்குடி புதுக்கோட்டை பொன் காந்திமதிநாதன் தாக்கல் செய்த பொதுநல மனு: திருநெல்வேலி கவின் செல்வகணேஷ்27. பொறியியல் பட்டதாரி. சென்னையில் ஒரு ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்தார். அவரும் ஒரு பெண்ணும் பள்ளி பருவத்திலிருந்து காதலித்தனர். தற்போது அப்பெண் ஒரு தனியார் மருத்துவமனையில் சித்தா டாக்டராக பணிபுரிகிறார். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். பெண்ணின் குடும்பத்தினரிடமிருந்து கவினின் குடும்பத்திற்கு மிரட்டல் வந்தது. ஜூலை 27ல் கவினை சமரசத்திற்கு வருமாறு பெண்ணின் சகோதரர் சுர்ஜித் அழைத்தார். அவர் அரிவாளால் தாக்கியதில் கவின் இறந்தார். சுர்ஜித் மற்றும் அவரது தந்தை சரவணகுமார் கைது செய்யப்பட்டனர். ஆவணக் கொலையை தடுக்கத் தவறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளன. கவின் ஆணவப் படுகொலை வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.,போலீசாருக்கு மாற்றப்பட்டது. நியாயமான விசாரணையை மேற்கொள்ள மாவட்ட நீதிபதி கண்காணிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கவின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். ஆணவக் கொலையை தடுக்க சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என தமிழக தலைமைச் செயலர், உள்துறை செயலர், டி.ஜி.பி.,க்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரியா கிளீட் அமர்வு விசாரித்தது. விசாரணைக்கு இடையூறு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் பினேகாஸ்: சுர்ஜித்தின் தாயை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை. ஒரு போலீஸ் அதிகாரி சம்பவத்திற்கு முன்பே கவினை மிரட்டியுள்ளார். குற்றம் சாட்டப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக செயல்பட்டுள்ளார். அந்த அதிகாரி சம்பந்தப்பட்ட அலைபேசி உரையாடல் விபரங்களை போலீசார் சேகரிக்கவில்லை. சம்பவ இடத்தில் கலெக்டர், போலீஸ் கமிஷனர் ஆய்வு செய்யவில்லை. அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் அஜ்மல்கான், கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் செந்தில்குமார்: ஜூலை 27 மதியம் 2:30 மணிக்கு சம்பவம் நடந்தது. மாலை 5:00 மணிக்கு வழக்கு பதியப்பட்டது. இரவு 7:30 மணிக்கு சுர்ஜித் கைது செய்யப்பட்டார். வழக்கு விசாரணை ஜூலை 30ல் சி.பி.சி.ஐ.டி.,போலீசாருக்கு மாற்றப்பட்டது. 3 அலைபேசிகள், 7 கண்காணிப்பு கேமரா காட்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு தடய அறிவியல் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. கவின் குடும்பத்திற்கு இடைக்காலமாக ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மீதம் ரூ.6 லட்சம் கீழமை நீதிமன்றத்தில் போலீசார் இறுதி அறிக்கை தாக்கல் செய்தபின் வழங்கப்படும். விசாரணை முறையாக நடக்கிறது. சம்பவ இடத்தை கலெக்டர், போலீஸ் கமிஷனர் பார்வையிட்டனர். இதுபோன்ற மூன்றாம் நபர்கள் தலையீடு மூலம் வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படும். சி.பி.சி.ஐ.டி.,போலீசார் சம்பந்தப்பட்ட கீழமை நீதிமன்றத்தில் 2 மாதங்களில் இறுதி அறிக்கையை தாக்கல் செய்வர். இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: விசாரணை விரைவாக நடக்கிறது. அதில் தேவையின்றி குறுக்கிட வேண்டாம். மனுதாரர் தன்னிடம் உள்ள விபரங்களை சி.பி.சி.ஐ.டி.,வசம் ஒப்படைக்கலாம். தவறு செய்தவர்கள் தப்பிக்கக் கூடாது. சி.பி.சி.ஐ.டி.,இறுதி அறிக்கையை 2 மாதங்களில் தாக்கல் செய்ய வேண்டும். விசாரணை 8 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.