| ADDED : நவ 16, 2025 03:26 AM
புதுார்: மதுரை சூர்யா நகரில் கிழக்கு சட்டசபைத் தொகுதிக்குட்பட்ட 14 வார்டுகளுக்கான குடியிருப்போர் குறைதீர் முகாம், அமைச்சர் மூர்த்தி தலைமையில் நடந்தது. மாநகராட்சியின் 3 முதல் 9, 11, 13, 17 முதல் 19, 38, 40 ஆகிய வார்டுகளில் உள்ள நுாற்றுக்கும் மேற்பட்ட குடியிருப்பு சங்க நிர்வாகிகள், ரோடு, பாதாள சாக்கடை, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை பிரச்னைகள் குறித்த புகார்களை அமைச்சரிடம் மனுவாக வழங்கினர். சம்மந்தப்பட்ட அதிகாரிகள் அதற்கு விளக்கமளித்தனர். அமைச்சர் பேசியதாவது: மாவட்டத்தின் 10 தொகுதிகளுக்கும் முன்னுதாரணமாக கிழக்குத் தொகுதி குடியிருப்பு நலச்சங்கங்கள் உள்ளன. இத்தொகுதியின் 14 வார்டுகளிலும் அனைத்து பணிகளும் பெருமளவு முடிந்துள்ளன. பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகள் விடுபட்ட இடங்களில் அதற்கான டெண்டர் விடப்பட்டு பணி நடக்கிறது. தமிழகத்திற்கே முன்மாதிரி மாவட்டமாக மதுரை இருக்கும். மேற்கு தொகுதிக்கான குறைதீர் முகாம் 10 நாட்களில் நடைபெறும் என்றார். கலெக்டர் பிரவீன்குமார், மாநகராட்சி கமிஷனர் சித்ரா, எம்.எல்.ஏ., வெங்கடேசன், முன்னாள் மண்டலத் தலைவி வாசுகி, கவுன்சிலர்கள் பால்செல்வி, ரோஹினி, ல க் ஷிகாஸ்ரீ உட்பட பல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.