உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / மோசடி வழக்கில் நியோமேக்ஸ் சொத்து முடக்கம் உயர்நீதிமன்றம் உத்தரவு

மோசடி வழக்கில் நியோமேக்ஸ் சொத்து முடக்கம் உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: மோசடி வழக்கில் சிக்கிய நியோமேக்ஸ் நிறுவன சொத்துக்களை முடக்கத் தவறினால் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி., ஆஜராக உத்தரவிட வேண்டிய நிலை ஏற்படும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை பைபாஸ் ரோடு எஸ்.எஸ்.காலனியில் 'நியோமேக்ஸ் பிராப்பர்டீஸ்' நிறுவனம் செயல்பட்டது. வாடிக்கையாளர்களிடம் டிபாசிட் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக அதன் இயக்குனர் கமலக் கண்ணன் உள்ளிட்ட சில நிர்வாகிகள் மீது மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். கமலக் கண்ணனுக்கு முதலீட்டாளர் நல பாதுகாப்பு (டான்பிட்) மதுரை சிறப்பு நீதிமன்றம் ஜாமின் அனுமதித்தது. அதற்கு எதிராக விருதுநகர் மாவட்டம் சொக்கலிங்காபுரம் ரவிசங்கர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: நிறுவனத்தில் முதலீடு செய்து பாதிக்கப்பட்டுள்ளேன். போலி நிறுவனம் நடத்தி பலரை ஏமாற்றியுள்ளனர். டான்பிட் நீதிமன்றம் சரியாக பரிசீலிக்காமல் ஜாமின் அனுமதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். இதுபோல் மதுரை அச்சம்பத்து கபிலுக்கு டான்பிட் நீதிமன்றம் ஜாமின் அனுமதித்ததை ரத்து செய்யக்கோரி புதுக்கோட்டை ராஜ்குமார் மனு செய்தார்.நீதிபதி எம்.தண்டபாணி விசாரித்தார்.அரசு தரப்பு: இதுவரை நிறுவனத்திற்கு சொந்தமான 19 சொத்துக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. மதிப்பு ரூ.76 கோடியே 58 லட்சத்து 60 ஆயிரத்து 577. சொத்துக்கள் 2 மாதங்களில் முடக்கப்படும். இவ்வாறு தெரிவித்தது.நீதிபதி: விசாரணை மார்ச் 5 க்கு ஒத்திவைக்கப்படுகிறது. அதற்குள் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால் பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.,ஆஜராக உத்தரவிட வேண்டிய நிலை ஏற்படும். இவ்வாறு உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி