| ADDED : டிச 27, 2025 07:24 AM
மதுரை: சிவகங்கை மாவட்டம் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் அறக்கட்டளைக்கு சொந்தமான ரூ.1.76 கோடி, 17.5 கிலோ தங்கம் மோசடி செய்யப்பட்டதாக குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். இதில் தண்ணீர்மலை, முத்துராமன் உள்ளிட்ட 6 பேர் உயர்நீதிமன்றக் கிளையில் முன்ஜாமின் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர்கள் நவநீதராஜா, சுஜித் ஆஜராகினர். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கணக்குகளை சரிபார்க்க பட்டய கணக்காளர் ராஜராஜேஸ்வரன் நியமிக்கப்படுகிறார். ஓய்வுபெற்ற நீதிபதி வி.சிவஞானம் கமிஷனராக நியமிக்கப்படுகிறார். அறங்காவலர்களுக்கு நிலம் அல்லது சொத்துக்களை கையாளும் அதிகாரம் உள்ளதா, அறங்காவலர்கள் அறக்கட்டளைக்குச் சொந்தமான நிலத்தை விற்பனை செய்துள்ளார்களா என சரிபார்க்க வேண்டும். தங்கம், வெள்ளி நகைகள் மற்றும் பிற பொருட்கள், வங்கி கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ள தொகையை சரிபார்க்க வேண்டும். யாரேனும் கருத்து தெரிவிக்க விரும்பினால், அவர்கள் இக்கமிஷனிடம் தெரிவிக்கலாம். கமிஷன் ஜன.,30ல் இந்நீதிமன்றத்தில் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். ஏற்கனவே இவ்வழக்கில் பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவு ஜன.,30 வரை நீட்டிக்கப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டார்.