உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  திருமணம் செய்வதாக கூறி உறவில் ஈடுபட்ட நபர் மீது மாணவி தொடர்ந்த வழக்கு ரத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

 திருமணம் செய்வதாக கூறி உறவில் ஈடுபட்ட நபர் மீது மாணவி தொடர்ந்த வழக்கு ரத்து உயர்நீதிமன்றம் உத்தரவு

மதுரை: திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் உறவில் ஈடுபட்ட நபர் மீது கல்லுாரி மாணவி தொடர்ந்த வழக்கை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. திருநெல்வேலி மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்தவர் தன்னுடன் கல்லுாரியில் படித்த மாணவி ஒருவருடன் நட்பாக பழகியுள்ளார். திருமணம் செய்துகொள்வதாக கூறி மாணவியுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இருவரும் 2024 வரை பலமுறை உறவில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் வாலிபர் மற்றொரு பெண்ணை திருமணம் செய்ய முற்பட்டதால் அவர்மீது மாணவி புகார் அளித்தார். வள்ளியூர் மகளிர் போலீசார் வாலிபர் மீது பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர். வள்ளியூர் நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வருகிறது. தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டி வாலிபர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெயமோகன், திருமணம் செய்துகொள்வதாக வாக்கு கொடுத்ததால் இருவருக்குமான பல ஆண்டுகால நெருங்கிய உறவை பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது. உள்நோக்கத்துடன் புகார் அளிக்கப்பட்டுள்ளது என வாதிட்டார். நீதிபதி பிறப்பித்த உத்தரவு: இவ்வழக்கில், மனுதாரரும் மாணவியும் விளைவுகளை அறிந்து பல ஆண்டுகளாக நெருக்கமாக இருந்துள்ளனர். திருமணத்திற்கு முந்தைய நெருக்கம் இன்றைய காலத்தில் அசாதாரணமானது அல்ல. அதற்காக இதுபோன்ற நடத்தையை ஆதரிக்கவில்லை. எனினும் சமூக யதார்த்தத்தை இந்நீதிமன்றம் உணர்ந்துள்ளது. இருவரும் தாமாக முன்வந்து நீண்டகாலம் நெருங்கிய உறவில் ஈடுபட்ட நிலையில், அதில் முறிவு ஏற்பட்டதும் குற்றவியல் சட்டத்தை பயன்படுத்துவது சரியல்ல. அவர்களுக்கிடையேயான உறவு தனிப்பட்ட விருப்பத்தின் எல்லைக்குற்பட்டது. அதனை நீதிமன்றம் தீர்மானிப்பது பொருத்தமானது அல்ல. ஒழுக்கத்தை விட சட்டப்பூர்வமான தன்மையை மட்டுமே நீதிமன்றங்கள் கையாள்கின்றன. வற்புறுத்தல், ஏமாற்றுதல், இயலாமையால் சம்மதம் பாதிக்கப்படும் இடங்களில் மட்டுமே சட்டம் தலையிடுகிறது. மனுதாரருக்கு, திருமண வாக்குறுதி அளித்து மாணவியை ஏமாற்றும் எண்ணம் இல்லை என தெரிகிறது. தனிப்பட்ட முரண்பாடுகளை தவறான நடத்தையாக சித்தரிக்க யாருக்கும் உரிமை இல்லை. உணர்ச்சி ரீதியான விளைவுகளைத் தீர்க்க சட்டத்தை கருவியாக பயன்படுத்த முடியாது. பரஸ்பர விருப்பத்தின் அடிப்படையில் உருவாகும் இத்தகைய விஷயங்களுக்கு குற்றவியல் வழக்கு தொடர வேண்டிய அவசியம் இல்லை. மனுதாரர் மீது வழக்கு தொடர்ந்துள்ளது சட்ட துஷ்பிரயோகத்திற்கு சமம். எனவே மனுதாரருக்கு எதிரான வழக்குகள் ரத்து செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ