உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / கைவிடப்பட்ட குவாரிகளை சுற்றிலும் வேலி அமைக்க நடவடிக்கை என்ன பதில் கோரும் உயர்நீதிமன்றம்

கைவிடப்பட்ட குவாரிகளை சுற்றிலும் வேலி அமைக்க நடவடிக்கை என்ன பதில் கோரும் உயர்நீதிமன்றம்

மதுரை: தென்மாவட்டங்களில் கைவிடப்பட்ட கல்குவாரிகளை சுற்றிலும் வேலி அமைக்க அரசாணைப்படி மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தமிழக அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை சத்தியமூர்த்தி தாக்கல் செய்த பொதுநல மனு: தமிழகத்தில் கைவிடப்பட்ட கனிம குவாரிகளில் தேங்கும் மழை நீரில் மனிதர்கள், கால்நடைகள் மூழ்கி இறப்பது தொடர்கிறது. மதுரை ஒத்தக்கடையில் பயனற்ற கல்குவாரியில் மூழ்கி ஒருவர் பலியானார். பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டியது சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் கடமை. குவாரி நடத்த உரிமம் பெறும் குத்தகைதாரர்களிடமிருந்து பசுமை நிதியை கனிமவள விதிகள்படி வசூலிக்க வேண்டும். அதை கைவிடப்பட்ட குவாரிகளை மறுசீரமைக்க பயன்படுத்த வேண்டும். குவாரி நடவடிக்கைகளுக்குப் பின் மறுசீரமைப்பு வழிகாட்டுதல்களை ஐ.நா.,வின் சுற்றுச்சூழல் திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்படி குவாரிகளில் மழைநீர் உட்புகுதல் உட்பட பல்வேறு விளைவுகளை ஆய்வு செய்வது அரசின் கடமை. மதுரை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் கைவிடப்பட்ட குவாரிகளை மறுசீரமைக்க விதிகள்படி குழு அமைக்க வேண்டும். அக்குழு குவாரிகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். கைவிடப்பட்ட குவாரிகளை சுற்றிலும் வேலி அமைக்க வேண்டும். குவாரி குத்தகை உரிமம் பெற்றவர்கள் பசுமை நிதி செலுத்தியதை உறுதி செய்ய வேண்டும். ஒவ்வொரு மாவட்டத்திலும் பசுமை நிதி உருவாக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார். நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜி.அருள்முருகன் அமர்வு விசாரித்தது. மனுதாரர் தரப்பு: சமீபத்தில் மதுரை கருப்பாயூரணி அருகே கல்குவாரியில் 2 குழந்தைகள் மூழ்கி பலியாகினர்.அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரா கதிரவன்: கைவிடப்பட்ட குவாரிகளை சுற்றிலும் வேலி அமைக்க பசுமை நிதியை விடுவிக்க ஏப்.22 ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குழு ரூ.50 லட்சம் வரை செலவிடலாம். அதற்கு மேல் தொகையை விடுவிக்க வேண்டுமெனில் அரசின் ஒப்புதல் பெற வேண்டும். மதுரை மாவட்டத்தில் கைவிடப்பட்ட குவாரிகளை சுற்றிலும் வேலி அமைக்கும் பணி நடக்கிறது. அரசாணையை நடைமுறைப்படுத்த மேற்கொண்ட நடவடிக்கை குறித்து தமிழக தொழில்துறை கூடுதல் தலைமைச் செயலர், கனிமவளத்துறை கமிஷனர் ஆக.21 ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,' என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ