உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  கபடி மைதானத்தின் பெயரில் கபளீகரம் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடா

 கபடி மைதானத்தின் பெயரில் கபளீகரம் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடா

சோழவந்தான்: சோழவந்தான் அருகே கருப்பட்டி ஊராட்சி அம்மச்சியாபுரத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்ததாக சர்ச்சை எழுந்துள்ளது. இங்கு ஊராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் பழைய கட்டடம் இடிக்கப்பட்ட இடத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.60 ஆயிரம் செலவில் கபடி மைதானம் அமைக்கப்பட்டதாக தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில் இந்தாண்டு ஜூலை 3 முதல் 23 வரை 20 நாட்கள் பணிகள் நடந்ததாகவும், 45 மனித சக்தி நாட்கள் செலவிடப்பட்டதாகவும், தொடர்புக்கு எண்- 1299 எனவும் எழுதப்பட்டுள்ளது. இது ஜியோ நிறுவனத்தின் அலைபேசி பேலன்ஸை செக் செய்யும் எண். கட்டப்பட்டதாக கூறப்படும் கபடி மைதானம் காலியிடமாகவே உள்ளது. மொத்தம் நுாற்றுக்கும் குறைவான செங்கற்களே பயன்படுத்தப்பட்டு சுற்றிலும் பார்டர் அமைக்கப்பட்டுள்ளது. இரண்டு நாட்கள் போதுமானவேலைக்கு 20 நாட்கள் எனவும், ஐந்து பேர் உழைப்புக் கூட பெறாத வேலைக்கு 45 மனித சக்திநாட்களை செலவிட்டதாகவும் கணக்கு காட்டியுள்ளனர். மேலும் பழைய கட்டடத்தின் இடிபாடுகள் முழுவதும் அகற்றப்படாமல் கம்பிகள் நீட்டிக்கொண்டு காட்சியளிக்கின்றது. ரூ.10 ஆயிரம் மதிப்பீட்டிற்கும் குறைவான பணிகளே நடந்துள்ளது. ஆனால் ரூ.60 ஆயிரம் என முறைகேடாக செலவு கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் இது போன்ற முறைகேடுகள் தொடர்வதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகம்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ