| ADDED : மார் 11, 2024 06:23 AM
திருநகர்: திருநகர் - பாலசுப்பிரமணியன் நகர் இணைப்பு தரைப்பாலத்தில் சேதமடைந்த பகுதியில் மீண்டும் ஒட்டுப்போடப்படுவதன் மூலம், நிரந்தர தீர்வுக்கு வழிகாணாமல் உள்ளனர்.திருநகர் ஏழாவது ஸ்டாப்பில் இருந்து பாலசுப்பிரமணியன் நகருக்கு செல்லும் வழியில் உள்ள, நிலையூர் கால்வாயின்மேல் தரைப்பாலம் உள்ளது. திருநகரிலிருந்து பாலசுப்ரமணியன் நகர், பாலாஜிநகர், ஹார்விபட்டிக்கு செல்வோர் இந்த இணைப்பு பாலத்தை பயன்படுத்துகின்றனர்.பாலசுப்பிரமணியர் நகர் விரிவாக்க பகுதி கட்டுமானப் பணிகளுக்கு தினமும் ஏராளமான மணல், செங்கல், ஜல்லி, போர்வெல் லாரிகள், பள்ளி வாகனங்கள் இந்த பாலம் வழியாகசென்று திரும்புகின்றன. அந்தப் பாலத்தின் ஒரு முனையில் சேதமடைந்து பெரிய ஓட்டை விழுந்தது. அது சிமென்ட் மூலம் மூடப்பட்டது.சில நாட்களில் அதே இடத்தில் மீண்டும் சேதம் அடைந்ததால் பழைய சிமென்ட் சிலாப் வைக்கப்பட்டது. அதுவும் சேதம் அடைந்தது. சில தினங்களுக்கு முன்பு சேதமடைந்த பகுதியில் மீண்டும் சிமென்டால் ஒட்டு போட்டுள்ளனர். 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அந்த தரைப்பாலம் முழுவதும் சேதம் அடைந்துள்ளது. இதற்கு நிரந்தர தீர்வு காணாமல், மீண்டும், மீண்டும் ஒட்டுப்போடும் வேலை செய்தால் விபரீதம் நிகழ வாய்ப்பு ஏற்படும். பெரும் விபத்து ஏற்படும் முன், புதிய தரைப்பாலம் கட்ட வேண்டும். அதுவரை அந்தப் பாலத்தில் கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்க வேண்டும்.