தமிழகத்தில் போலீசாருக்கு சங்கம் இல்லாதது ஏன்; வார விடுமுறை உத்தரவு வழக்கில் நீதிபதி கேள்வி
மதுரை : 'தமிழகத்தில் போலீசாருக்கு சங்கம் இல்லாதது ஏன்' என உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை நீதிபதி கேள்வி எழுப்பி, 'போலீசாருக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என்ற அரசு உத்தரவு எவ்வகையில் பின்பற்றப்படுகிறது' என தமிழக டி.ஜி.பி., பதில் மனுத்தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.மதுரை ஆஸ்டின்பட்டி போலீஸ்காரர் செந்தில்குமார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு: போலீஸ் துறையில் அதிக பணிச்சுமை இருப்பதாகவும், ஓய்வின்றி பணியாற்ற வேண்டி உள்ளதாகவும் போலீசார் தரப்பில் தொடர்ந்து புகார் கூறப்பட்டது. அவர்களது குறைகளை தீர்க்கும் வகையில் போலீஸ்காரர்கள் முதல் எஸ்.ஐ., வரை உள்ளவர்களுக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என 2021 ல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தவில்லை.எனவே வார விடுமுறை வழங்க வேண்டும் என்ற அரசு உத்தரவை நடைமுறைப்படுத்த உத்தரவிட வேண்டும்.இவ்வாறு தெரிவித்துள்ளார்.இம்மனு நீதிபதி பட்டு தேவானந்த் முன் விசாரணைக்கு வந்தது.அப்போது அரசு உத்தரவு முறையாக ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை. ஒரு லட்சத்து 20 ஆயிரம் போலீஸ்காரர்கள் உள்ள நிலையில் வார விடுமுறை வழங்கவில்லை என ஒரு போலீஸ்காரர் மட்டும் மனு தாக்கல் செய்து உள்ளார். அவரை இந்த நீதிமன்றம் பாராட்டுகிறது.மற்ற போலீஸ்காரர்கள் மவுனமாக இருப்பது, உயர் அதிகாரிகள் மீதான அச்சம் என்ற தகவல் வியப்பாக உள்ளது. ஜனநாயகம், மனித உரிமை என்பது அனைவருக்கும் தான்.கேரளா, ஆந்திரா மாநிலங்களில் போலீசாருக்கு சங்கங்கள் உள்ளன. ஆனால் தமிழகத்தில் மட்டும் இதுவரை சங்கம் இல்லாதது ஏன்.எனவே போலீசாருக்கு வார விடுமுறை வழங்க வேண்டும் என்ற அரசு உத்தரவு எந்த வகையில் பின்பற்றபடுகிறது என தமிழக டி.ஜி.பி., பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும்' என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.