| ADDED : ஜன 21, 2024 03:38 AM
மேலுார்: தும்பைபட்டி -பூதமங்கலம் பகுதியில் பெரியாறு கால்வாயை பராமரிக்காததால் புதர் மண்டியும், கண்மாய்கள் வறண்டு விட்டதாகவும் நீர்வளத்துறையினர் மீது புகார் எழுந்துள்ளது.புலிப்பட்டி 12 வது பெரியாறு பிரதான கால்வாய் மூலம் சென்னகரம்பட்டி கண்மாய் நிரம்பும். இக் கண்மாயில் 1 வது பிரிவு கால்வாய் கைலாசபுரம் 9 வது மடை வழியாக வல்லக்குடி, செகுட்டானை கண்மாய் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பும். அதன் மூலம் 500 ஏக்கருக்கு மேல் பாசனம் பெறும். ஆனால் நீர்வளத்துறையினர் அலட்சியத்தால் இந்தக் கண்மாய்கள் வறண்டு கிடக்கின்றன.விவசாயி ரமணன் கூறியதாவது: கால்வாய்களை பராமரிக்காததால் புதர் மண்டியும், கண்மாய்கள் வறண்டும் காணப்படுகின்றன. பல ஆண்டுகளாக விளைச்சல் இல்லாமல் நிலங்கள் தரிசாக கிடப்பதால் பொருளாதாரத்தில் பின்தங்கி உள்ளோம். கால்வாயை பராமரிக்க கோரி நீர்வளத்துறையில் மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை. குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் நீர்வளத்துறையினர் கால்வாயை பராமரிக்க வேண்டும், என்றார்.நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகையில், கால்வாய்களை பராமரிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றனர்.