மதுரை மாநகராட்சி வரி விதிப்பு முறைகேடு 3 பேருக்கு உயர்நீதிமன்றம் ஜாமின் அனுமதி
மதுரை: மதுரை மாநகராட்சி பகுதியில் சொத்துவரி விதிப்பு முறைகேடு தொடர்பாக 3 பேருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ஜாமின் அனுமதித்தது. மதுரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்தனர். மதுரை டி.ஐ.ஜி.,அபிநவ் குமார் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வழக்கில் 17 பேர் கைதாகினர். இவர்களில் புரோக்கர்களாக செயல்பட்ட முகமது நுார், சகா ஹூசைன், ராஜேஷ்குமார், மாநகராட்சி தற்காலிக ஊழியர் சதீஷ் ஆகியோருக்கு உயர்நீதிமன்றக் கிளை ஆக.20 ல் நிபந்தனை ஜாமின் அனுமதித்தது. கைதான மாநகராட்சி உதவி பொறியாளர் ரங்கராஜன், கம்ப்யூட்டர் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர் கார்த்திக், ஒப்பந்த ஊழியர்கள் தனசேகரன், பாலமுருகன் மற்றும் கண்ணன், ரவி, கருணாகரன் அதே நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்தனர். நீதிபதி எஸ்.ஸ்ரீமதி விசாரித்தார். அரசு தரப்பு: கம்ப்யூட்டர் உள்ளிட்ட தொழில்நுட்பக் கருவிகளை கைப்பற்றி விசாரணை நடக்கிறது. ஜாமின் அனுமதித்தால் விசாரணையை பாதிக்கும். மனுதாரர்கள் தரப்பு: கைதாகி நீண்ட நாட்களாகிறது. ஏற்கனவே சிலருக்கு ஜாமின் அனுமதிக்கப்பட்டுள்ளது. இம்மனுதாரர்கள்விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்கத் தயார். இவ்வாறு விவாதம் நடந்தது. நீதிபதி பிறப்பித்த உத்தரவு: கார்த்திக், தனசேகரன், பாலமுருகனுக்கு ஜாமின் அனுமதிக்கப்படுகிறது. மற்றவர்களின் மனுக்கள் மீதான விசாரணை செப்.8 க்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றார்.