| ADDED : ஆக 01, 2011 02:04 AM
திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் சின்ன உடைப்பு
கிராமத்தில், நிலத்தை சமப்படுத்தும் நவீன லேசர் கருவி மற்றும் வேளாண்
கருவிகளின் பயன்பாடுகள் குறித்த செயல் விளக்கம் நடந்தது.வேளாண்மை பொறியியல்
துறை சார்பில், வேளாண் தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தில் நிலத்தை
சீரமைக்கும் லேசர் கருவி, களை எடுக்கும், மரம் வெட்டும், மரக்கிளைகளை
கழிக்கும் கருவிகள், தெளிப்பான்கள் ஆகியவற்றை பயன்படுத்துதல் குறித்த செயல்
விளக்கம் காண்பிக்கப்பட்டது. மதுரை வேளாண்மை இணை இயக்குனர் சங்கரலிங்கம்,
மண்டல கண்காணிப்பு பொறியாளர் தெய்வேந்திரன், கோட்ட செயற் பொறியாளர்
ஆரோக்கியசாமி, உபகோட்ட உதவி செயற் பொறியாளர் பெரியசாமி, வேளாண்மை துணை
இயக்குனர் சம்பத்குமார், உதவி இயக்குனர் செல்வன் உட்பட பலர் கலந்து
கொண்டனர். உதவி செயற்பொறியாளர் பெரியசாமி கூறுகையில், ''பழைய முறைப்படி விவசாய
நிலங்களில் தொழி அடிப்பதால், நிலம் சமம் இல்லாத நிலை காணப்படும். இதனால்
பயிர்களுக்கு சீரான தண்ணீர், உரச்சத்து கிடைக்காமல் விளைச்சல் பாதிக்கும்.
இதை தவிர்க்க 3.25 லட்சம் ரூபாயில் நவீன லேசர் கருவி வாங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் நிலங்களை சமப்படுத்தினால், அனைத்து பகுதிகளுக்கும் சமமான அளவில்
தண்ணீர் கிடைப்பதுடன், தண்ணீர் சேமிக்கப்படும். பயிர் நன்றாக வளர்ந்த அதிக
விளைச்சல் கொடுக்கும். உரச் செலவும் குறைவு. இக்கருவி மதுரை மாவட்டத்தில்
முதல்முறையாக இங்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. என்றார்.