உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / நாராயணபுரம் கண்மாயில் படகு சவாரிஅமைச்சர் ராஜூ துவக்கி வைத்தார்

நாராயணபுரம் கண்மாயில் படகு சவாரிஅமைச்சர் ராஜூ துவக்கி வைத்தார்

புதூர்: தினமலர் செய்தி எதிரொலியால் மதுரை நாராயணபுரம் கண்மாயை பாதுகாக்கும் வகையில் முதற்கட்டமாக நேற்று படகு சவாரியை அமைச்சர் ராஜூ மற்றும் கலெக்டர் சகாயம் துவக்கி வைத்தனர். மதுரை நாகனாகுளம் ஊராட்சியில் நாராயணபுரம் பெரிய கண்மாய் உள்ளது. பல ஆண்டுகளாக தூர் வாராததால் தூர்ந்து போய் தண்ணீரின்றி காணப்பட்டது. இதை தூர் வாரி தண்ணீர் தேக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு 20 அடி ஆழத்திற்கு கண்மாய் தூர்வாரப்பட்டது. மழை காலத்தில் கண்மாயின் முழு அளவு தண்ணீர் தேங்கியதால் கடல் போல் காட்சி அளித்தது. இங்கு மீன் வளர்ப்பதற்கு பொதுப்பணித் துறையினர் அனுமதி வழங்கினர். மீன் பிடிக்கும்போது தண்ணீர் வெளியேற்றப்படுவதால், கண்மாய் வறண்டு நிலத்தடி நீர் பாதிக்கும் என, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கண்மாயை சுற்றி வேலி அமைத்து பாதுகாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதனால், அப்போதைய கலெக்டர் காமராஜ் கண்மாயில் மரக்கன்று நடும் விழாவை துவக்கி வைத்து கூறுகையில், ''பொதுமக்கள் பயன்படும் வகையில் இங்கு 600 மரக் கன்றுகள் நடப்படும். கண்மாயை சுற்றி முள்வேலி அமைத்து, குழந்தைகள் பார்க்குடன் கூடிய நடைமேடை அமைக்கப்படும்,'' என்றார். ஒரு ஆண்டிற்கு மேலாகியும் எந்த நடவடிக்கையும் இல்லை. கண்மாயில் வைக்கப்பட்ட மரக்கன்றுகளும் பராமரிப்பு இன்றி கருகிவிட்டன. கண்மாய் பாதுகாக்கப்படுமா? என ஜூலை 19ல் தினமலர் இதழ் செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து சுற்றுலா வளர்ச்சித் துறை சார்பில் படகு சவாரி விடும் வகையில் கண்மாய் மேம்படுத்தப்பட்டது. இதன் துவக்க விழா மற்றும் இலவச நலத்திட்டங்கள் வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் சகாயம் தலைமைவகித்தார். அமைச்சர் ராஜூ துவக்கி வைத்து, நலத் திட்ட உதவிகள் வழங்கினார். கர்ப்பிணிகள், முதியோர் உதவித் தொகை என, 240 பேருக்கு, 9.60 லட்சம் ரூபாய்க்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. எம்.எல்.ஏ.,க்கள் போஸ், முத்துராமலிங்கம், தமிழரசன், கருப்பையா, அண்ணாதுரை, ஆர்.டி.ஓ., துரைராஜ், துணை தணி ஆட்சியர் ராஜாராம், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் முருகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை