| ADDED : செப் 01, 2011 02:19 AM
மதுரை : நல்லாசிரியர் விருதுகளை அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.கல்வித் துறையில் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு தேசிய, மாநில அளவிலான நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்படுகின்றன. தற்போது துவக்க கல்வித் துறையில் கல்வி மாவட்ட அளவில் 3 பேருக்கும், பள்ளி கல்வித் துறையில் 2 பேருக்கும் வழங்கப்படுகிறது. இவ்விருதுக்கு பெரும்பாலும் தலைமை ஆசிரியர்களே தேர்வாகின்றனர். இதனால், பள்ளிகளில் பணியாற்றும் பிறவகை ஆசிரியர்கள் புறக்கணிக்கப்படுவதாக கருதுகின்றனர். ஏனெனில், தனியார் பள்ளிகளில் பலர் தலைமை ஆசிரியர்களாக வர தகுதியிருந்தும், நிர்வாக காரணங்களால் வரமுடிவதில்லை. அரசு உயர்நிலைப் பள்ளிகளிலும், பட்டதாரி ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி எளிதாக கிடைத்து விடுவதில்லை. எனவே, நல்லாசிரியர் விருது கிடைக்காமல் போய்விடுவதாக நினைக்கின்றனர்.இதைதவிர்க்க, அனைத்து தரப்பு ஆசிரியர்களிலும் தலா ஒருவருக்கு நல்லாசிரியர் விருதை வழங்கலாம். இதை இடைநிலை, சிறப்பு, பட்டதாரி, முதுநிலை, தலைமை ஆசிரியர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பகிர்ந்து அளிக்கலாம். உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கூறுகையில், ''நல்லாசிரியர் விருதை அனைத்து வகை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். தேவையானால், இந்த எண்ணிக்கையையும் அதிகரிக்கலாம். இதனால், அனைத்து தரப்பு ஆசிரியர்களும் திருப்தியடைவர். தனியார் பள்ளிகளில் பதவி உயர்வு கிடைக்காத ஆசிரியர்களும் பலனடைவர்,'' என்றார்.