| ADDED : நவ 18, 2025 04:15 AM
மதுரை: மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறையில் 33 துணை பி.டி.ஓ.,க்கள் அதிரடியாக இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் இடமாற்றத்தில் அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கவில்லை என்ற குமுறல் எழுந்துள்ளது. வரும் 2026 ல் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இதையடுத்து ஊரக வளர்ச்சித்துறையில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றுவோர், சொந்த தொகுதிக்குள் பணிபுரிவோரை வேறு தொகுதிக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. விதிமீறிய இடமாறுதல் மதுரை மாவட்டத்தில் 13 ஒன்றியங்கள் உள்ளன. இங்கு பணிபுரியும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் (டெபுடி பி.டி.ஓ.,க்கள்) 33 பேரை மாவட்ட நிர்வாகம் இடமாறுதல் செய்துள்ளது. இதில் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் கடைபிடிக்கப்படவில்லை என இத்துறை அலுவலர்கள் புலம்புகின்றனர். இடமாறுதலில் சொந்த தொகுதிக்குள்ளேயே 7 பேரும், ஜூனியர் அதிகாரிகளாக உள்ள 9 பேரை சீனியர்களின் பணியிடத்திலும், சீனியர்கள் பலரை ஜூனியர்கள் பணியிடத்திலும் வரிசை மாறி நியமித்துள்ளனர். இத்துறையில் பணிமூப்பு அடிப்படையில் தணிக்கை, நிர்வாகம், சத்துணவு உட்பட திட்டங்கள் அடுத்து ஊராட்சிகள் என்ற வரிசையில் சீனியர்கள் முதல் ஜூனியர்கள் வரை பணிநியமனம் வழங்குவர். பணபரிவர்த்தனை அதிகளவில் இருப்பதால் அவை சார்ந்த பொறுப்புகளை சீனியர்களே கவனிக்கும் வகையில் இடமாறுதல் அளிக்கப்படும். ஆனால் இங்கு இடமாறுதலில் பெரும்பாலும் விதிமீறப்பட்டுள்ளது. ஜூனியராக உள்ள துணை பி.டி.ஓ., தலைமை இடத்து துணை பி.டி.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார். சீனியர் துணை பி.டி.ஓ., களத்திற்கு செல்லும் மண்டல துணை பி.டி.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார். ஜூனியர்களாக உள்ள துணை பி.டி.ஓ.,க்கள் சத்துணவு உட்பட திட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ளனர். ஓய்வு பெறும் நிலையில் உள்ள சீனியர் துணை பி.டி.ஓ., ஒருவர் தலைமை இடத்து பணியிடம் கேட்டும், மண்டல துணை பி.டி.ஓ.,வாக நியமிக்கப்பட்டுள்ளார். அலுவலர்கள் குமுறல் அதிகாரிகள் கூறியதாவது: ஜூனியர், சீனியர் பிரச்னை மட்டுமின்றி, ஒன்பது பேர் அவரவர் தொகுதிக்குள்ளும் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளனர். தற்போது ஊராட்சிகளில் தலைவர் பதவி இல்லை. ரூ.5 லட்சம் வரையான பணம் கையாளும் தகுதி சிறப்பு அலுவலர்களாக உள்ள துணை பி.டி.ஓ.,க்களுக்கு உள்ளது. இதனால்தான் பணிமூப்பு அடிப்படையில் இடமாறுதல் எந்தெந்த வரிசையில் இடமாறுதல் செய்ய வேண்டும் என கூடுதல் தலைமைச் செயலாளரே சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். இருப்பினும் மதுரையில் விதிகள் மீறப்பட்டுள்ளன. இதற்கு என்ன காரணம் எனத்தெரியவில்லை. இதன் பின்னணியில் அரசியல் இருக்கலாம் என கருதுகிறோம் என்றனர்.