| ADDED : நவ 23, 2025 04:04 AM
வாடிப்பட்டி: வாடிப்பட்டி அருகே பாண்டியராஜபுரம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத்தில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு செய்தார். பாலை விற்பனைக்கு கொண்டு வந்த விவசாயிகளிடம் குறை, தேவைகளை கேட்டறிந்தார். 14 உறுப்பினர்களுக்கு கடன் தொகைக்கான காசோலை வழங்கியபோது 'தினமும் எத்தனை லிட்டர் தருகிறீர்கள்; விலை என்ன' எனக் கேட்டபோது விவசாயிகள் பதில் கூற தடுமாறினர். பின்னர், கடந்த 2 நாட்களாக மட்டுமே பாலின் தரம் ஆய்வு செய்து ஒப்புகை சீட்டு வழங்கப்படுவதாக விவசாயிகள் கூறியதை அடுத்து அதிகாரிகளை அமைச்சர் கடிந்தார். 'தினமும் கருவியில் பாலின் தரத்தை ஆய்வு செய்து உரிய சீட்டு, விலை வழங்க வேண்டும்' என அறிவுறுத்தினார். பின் குலசேகரன்கோட்டை பகுதி விவசாயிகளின் மாட்டு பண்ணைக்கு சென்று அவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது பொங்கலுக்கும் ஊக்கத்தொகை வழங்க விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார். துறை கூடுதல் கமிஷனர் பிரமிளா, பொது மேலாளர் சிவகாமி, துணை பொது மேலாளர் முகமது ரபிக், உதவி பொது மேலாளர் கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.