| ADDED : ஜூலை 19, 2024 06:07 AM
மதுரை : பருவமழை காலத்தில் குடிநீரால் ஏற்படும் தொற்று பாதிப்பை தவிர்க்க அனைத்து மேல்நிலை தொட்டிகளிலும் குளோரினேஷன் செய்து சுத்தமான குடிநீர் வினியோகிக்க மாவட்ட நிர்வாகம் சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.தமிழகத்தில் அக்டோபர், நவம்பரில் பருவமழைக் காலம் துவங்கிவிடும். இக்கால கட்டத்தில் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு. குறிப்பாக குடிநீர் தொடர்பான பாதிப்புகள் அதிகமிருக்கும். கிராமங்களில் மேல்நிலை தொட்டிகள் மூலம் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. பல கிராமங்களில் இத்தொட்டிகளை முறையாக பராமரிப்பதில்லை. இதனால் அவை பாசி படர்ந்து, சிறுநுண்ணுயிரிகள் உற்பத்தியாகி வாந்தி, பேதி, காலரா போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தி விடும். பல ஆண்டுகளாக பல கிராமங்களில் இதனை கண்டு கொள்ளாத நிலையே இருந்தது.தற்போது மாவட்ட நிர்வாகம் துாய்மையான குடிநீர் வினியோகத்தை உறுதிப்படுத்த இப்போதே நடவடிக்கையை துவக்கியுள்ளது. கலெக்டர் சங்கீதா, கூடுதல் கலெக்டர் மோனிகாராணா ஆலோசனைப்படி உதவி இயக்குனர் (கிராம பஞ்சாயத்து) அரவிந்தன் இதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.அதன்படி இன்று (ஜூலை 19) முதல் ஒரு வாரத்திற்குள் அனைத்து தொட்டிகளையும் பாசிகளை அகற்றி, குடிநீரில் குளோரின் கலந்து, துாய்மையான குடிநீரை வினியோகிக்க ஏற்பாடு செய்துள்ளனர். மாவட்டத்தில் உள்ள 420 ஊராட்சிகளில் 1600க்கும் மேற்பட்ட தொட்டிகள் உள்ளன. இதற்கான ஊழியர்களுடன் வட்டார அளவில் ஒருங்கிணைப்பாளர்கள், ஊக்குவிப்பாளர்களை நியமித்து இப்பணிகளை கவனிக்க உள்ளனர். குடிநீர் குளோரினேஷன் செய்திருப்பதை உறுதிப்படுத்த 'ஓ.டி., சொல்யூஷனை' அதில் கலந்தால் நீர் மஞ்சளாக மாறும். இதனடிப்படையில் அதனை உறுதிப்படுத்தி அதிகாரிகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்கவும் உத்தரவிட்டுள்ளனர். ஒரு வாரத்திற்குள் அனைத்து தொட்டிகளிலும் குடிநீர் துாய்மை பராமரிப்பு பணி முடிந்ததும், 10 முதல் 15 நாட்களுக்கு பின் அடுத்து இப்பணியை தீவிரமாக நடத்தவும் முடிவு செய்துள்ளனர். மேலும் கிராமங்களில் குப்பையையும் அகற்றி துாய்மையை பராமரிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.