| ADDED : நவ 19, 2025 05:21 AM
மதுரை: மதுரை மஸ்தான்பட்டியில் கட்டப்படும் கருப்பாயூரணி பத்திர அலுவலக கட்டடத்திற்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர். மதுரை வடக்கு மாவட்ட ஒருங்கிணைந்த பத்திரப் பதிவு அலுவலகம் ஒத்தக்கடையில் செயல்பட்டு வந்தது. இது நிர்வாக வசதிக்காக செட்டிக்குளம், கருப்பாயூரணி, விளாங்குடி என 3 ஆக பிரிக்கப்பட்டு வாடகை கட்டடங்களில் செயல்படுகிறது. இதில் செட்டிக்குளம் அலுவலகத்திற்கு மட்டும் சொந்த கட்டடம் உள்ளது. கருப்பாயூரணி, விளாங்குடியில் சொந்த கட்டடம் கட்டும் பணி நடக்கிறது. இதில் கருப்பாயூரணிக்குரிய அலுவலகம் மஸ்தான்பட்டி ராணிமங்கம்மாள் ரோட்டில் கட்டப்படுகிறது. இந்த ரோடு வண்டியூர் - ரிங்ரோடு சந்திப்பில் இருந்து 2 கி.மீ., தொலைவில் சிவகங்கை ரோட்டில் ஒத்தப்பட்டியில் போய்ச் சேர்கிறது. இது 25 அடி அகலமே உள்ளது. ரோட்டின் இருபுறமும் கல்குவாரிகளும், அதில் நீர்நிரம்பிய நிலையில் பெரிய பெரிய பள்ளங்களும் உள்ளன. வாகனங்கள் விலக முடியாதளவு குறுகலாக உள்ளது. தெருவிளக்கு இன்றி, இரவில் ஆள்நடமாட்டம், பஸ்போக்குவரத்துக் குறைவு. காட்டுப்பகுதியில் இருப்பதாலேயே, அருகில் கட்டியுள்ள கனிமவளத்துறை மண்டல அலுவலகம் 3 ஆண்டுகளாக திறக்காமல் உள்ளது. ஆனால் பத்திர அலுவலகத்திற்கு அதிகளவில் பொதுமக்கள் வருவர் என்பதால், அடிப்படை வசதிகள் அவசியம். அதிக வாகனங்கள் செல்வதற்கேற்ப ரோட்டை அகலமாக்க வேண்டும். ஆவண எழுத்தர்கள், நகலகங்கள் செயல்பட வசதி வேண்டும். இல்லையெனில் பத்திர பதிவு அலுவலகம் சென்று வருவது சிரமமே. கருப்பாயூரணி சமூக ஆர்வலர் கணேசன் கூறுகையில், ''கருப்பாயூரணியில் சொந்த கட்டடத்தில் பதிவு அலுவலகம் செயல்படுவது நல்ல ஏற்பாடு. மக்கள் வசதியாக அந்த அலுவலகம் சென்றுவர சாலை, போக்குவரத்து, பாதுகாப்பு, தெருவிளக்கு வசதிகளை ஏற்படுத்தினால் மேலும் பயன்பெறுவர்'' என்றார்.