| ADDED : மார் 20, 2024 12:35 AM
மதுரை : லோக்சபா தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று (மார்ச் 20) துவங்குவதையடுத்து மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.மதுரை லோக்சபா தொகுதியில் மதுரை கிழக்கு, வடக்கு, மேற்கு, தெற்கு, மத்தி மற்றும் மேலுார் சட்டசபை தொகுதிகள் உள்ளன. தேர்தல் அதிகாரியாக கலெக்டர் சங்கீதா உள்ளார். அவருடன் உதவி தேர்தல் அதிகாரியாக மதுரை வருவாய் கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ.,) ஷாலனி உள்ளார்.மதுரை தொகுதியில் போட்டியிட விரும்புவோர் இவர்களிடம் வேட்பு மனுதாக்கல் செய்யலாம். இன்று காலை 11:00 மணி முதல் மதியம் 3:00 மணி வரை மனுதாக்கல் செய்யலாம். இதற்காக தயார் நிலையில் உள்ள அதிகாரிகள் உட்பட தேவையான ஏற்பாடுகளை செய்துள்ளனர். மனுதாக்கலையொட்டி நேற்றே சிலர் படிவம் 2ஏ, 26 (உறுதிமொழி) ஆகியவற்றை பெற்றுச் சென்றுள்ளனர். அவர்கள் படிவத்தை பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து ரூ.25 ஆயிரம் டெபாசிட் தொகையுடன் தாக்கல் செய்ய வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட கட்சி வேட்பாளர் எனில் ஒருவரும், மற்றவர்களுக்கு 10 பேரும் வேட்பாளரை முன்மொழிய வேண்டும்.மனுதாக்கல் கடைசி நாள் மார்ச் 27. மறுநாள் (மார்ச் 28) மனுக்கள் பரிசீலனை நடைபெறும். மார்ச் 30க்குள் வாபஸ் பெறுவோர் மனுவை திரும்ப பெறலாம். அன்று மாலை வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கீடு செய்து, களத்தில் நிற்கும் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும்.
தேர்தல் பார்வையாளர்கள் வருகை
மேற்கு வங்க மாநில வருமான வரித்துறை அதிகாரி ராணி லாமா மேலுார், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு சட்டசபை தொகுதிகளுக்கும், இதே மாநிலத்தின் மற்றொரு வருமான வரித்துறை அதிகாரி மதுமிதா தாஸ் மதுரை மேற்கு, தெற்கு, மத்தி சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் செலவின கண்காணிப்பாளராக செயல்பட உள்ளனர். இவர்கள் இன்று மதுரை வருகின்றனர்.