| ADDED : நவ 24, 2025 06:18 AM
பாலமேடு: பாலமேடு சுற்றுவட்டார பகுதிகளான மாணிக்கம்பட்டி, பள்ளபட்டி, மறவபட்டி, வலையபட்டி, சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு மண், கல்குவாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்குவாரிகளில் இருந்து லாரிகள் மூலமாக ஜல்லி, எம்-சாண்ட், கருங்கற்கள் கட்டுமான பணிகளுக்கு எடுத்து செல்லப்படுகிறது. அனுமதிக்கப்பட்ட அளவிலிருந்து லாரிகள் மூலமாக அதிகப்படியான பாரங்கள் ஏற்றிசெல்வது, சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. லாரியில் எம் -சாண்ட் எடுத்து செல்லும் போது தார்ப்பாய் மூடாமல் செல்வதால் காற்றில் துாசு பறக்கிறது. லாரிகளை பின்தொடர்ந்து செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கு சிரமம் ஏற்படுகிறது. லாரி பிரேக் அடிக்கும் போது, வேகத்தடைகளில் ஏறி இறங்கும்போது கற்கள், மண் கட்டிகள் ரோட்டில் விழுகிறது. இது பிற வாகனங்களை குறிப்பாக டூவீலர்களை விபத்தில் சிக்க வைக்கிறது. அதிக பாரம் ஏற்றிச் செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க துறை அதிகாரிகள் முன் வர வேண்டும்.