| ADDED : மார் 13, 2024 12:21 AM
உசிலம்பட்டி- ''பன்னீர்செல்வத்திற்கு தான் இரட்டை இலை சின்னம் வரும். லோக்சபா தேர்தலில் 39 தொகுதிகளிலும் அணி சார்பில் வேட்பாளர்கள் நிற்க தயாராக இருக்கிறோம்'' என உசிலம்பட்டி எம்.எல்.ஏ., அய்யப்பன் கூறினார்.உசிலம்பட்டியில் பன்னீர்செல்வம் அணியின் பூத் கமிட்டி ஆலோசனைக்கூட்டம் மதுரை தெற்கு மாவட்ட அவைத்தலைவர் வேலுச்சாமி தலைமையில் நடந்தது. முன்னாள் மாவட்ட கவுன்சிலர் போத்திராஜா பங்கேற்றனர்.அய்யப்பன் பேசியதாவது: பழனிச்சாமி குரு துரோகி. அவரை முதல்வராக கொண்டு வந்த சசிகலா, தினகரன் உள்ளிட்டோருக்கு துரோகம் செய்துள்ளார். பா.ஜ.,வுடன் கூட்டணியில் இருந்து கொண்டு பலனை அனுபவித்து விட்டு அவர்களையும் கூட்டணியில் இருந்து வெளியேற்றி விட்டார். தற்போது கூட்டணிக்கு யாரும் வராமல் விலகி ஓடுகின்றனர். தேனி லோக்சபா தொகுதியில் பன்னீர்செல்வம் பா.ஜ., கூட்டணியில், இரட்டை இலைச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று பா.ஜ., ஆட்சியில் மத்திய அமைச்சராக பொறுப்பேற்று வர உள்ளார் என்றார்.நிருபர்களிடம் அவர் கூறுகையில், ''வழக்குகளில் வெற்றி பெற்று இரட்டை இலை சின்னம் பன்னீர்செல்வம் அணிக்குத் தான் வரும். அவரது தலைமையில் 39 லோக்சபா தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்தில் நிற்பதற்கு தயாராக இருக்கிறோம்'' என்றார்.