| ADDED : நவ 21, 2025 03:58 AM
மதுரை: மதுரையில் அப்பள குழுமத்திற்கான பொது சேவை மையம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், கட்டடம் கட்டுவதற்கான நகர ஊரமைப்பு திட்டத்திற்கு (டி.டி.சி.பி.,) விண்ணப்பித்து ஓராண்டாகியும் இதுவரை அனுமதி வழங்கவில்லை. தமிழக குறு, சிறு, நடுத்தரத்தொழில் துறை (எம்.எஸ்.எம்.இ.,) சார்பில் மதுரை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் பொது சேவை மையங்கள் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. மதுரையில் அப்பள குழுமத்திற்கு பொதுசேவை மையம் (சி.எப்.சி.,) அமைக்க ரூ.4.86 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் மையத்திற்கான கட்டடம் கட்டுவதற்கு ஓராண்டுக்கு முன்பே டி.டி.சி.பி.,யில் விண்ணப்பித்தும் இதுவரை அனுமதி கிடைக்கவில்லை என்கிறார் தமிழ்நாடு அப்பளம் வடகம் மோர்வத்தல் சங்க மாநிலத் தலைவர் திருமுருகன். அவர் கூறியதாவது: எங்கள் சங்கம் சார்பில் மதுரையில்ஒருங்கிணைந்த அப்பள குழுமம் (ஐ.ஏ.சி.,) உருவாக்கியுள்ளோம். 120 நிறுவன உற்பத்தியாளர்கள், குடிசைத்தொழிலாக வீடுகளில் தொழில் செய்யும் 120 பேர் என 240 பேர் இக்குழுமத்தில் இணைந்துள்ளோம். இதற்கான பொதுசேவை மையம் அமைக்க, குழுவாக சேர்ந்து மதுரை விராதனுாரில் ஒன்றே கால் ஏக்கர் நிலம் வாங்கியுள்ளோம். இதில் 50ஆயிரம் சதுரஅடியில் கட்டடம் கட்ட ஓராண்டுக்கு முன்பே டி.டி.சி.பி.,க்கு விண்ணப்பித்திருந்தோம். இதுவரை அனுமதி கிடைக்கவில்லை. திட்டத்திற்கான மதிப்பீடு ரூ.8 கோடி. அதில் ரூ.4.86 கோடியை தமிழக அரசு மானியமாக வழங்கும். கட்டுமான அனுமதி கிடைத்து விட்டால் கட்டடப் பணிகள் முடித்தவுடன் அப்பளம் தயாரிப்பதற்கான கருவிகள் வாங்கி விடுவோம். கருப்பு உளுந்தின் தோல் மட்டும் நீக்கும் கருவி, பருப்பாக உடைத்து மாவரைக்கும் கருவி, மாவு பிசையும் கருவி, அப்பளம் தயாரிக்கும் கருவி, பேக்கிங் கருவிகள் இங்கு அமைக்கப்படும். யாருக்கு என்ன வசதி தேவைப்படுகிறதோ அதை பயன்படுத்திக் கொள்ளலாம். டி.டி.சி.பி., அனுமதி விரைந்து கிடைக்க தமிழக அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.