குன்றத்தில் ஜன.28ல் தெப்பத் திருவிழா; தண்ணீர் நிரப்ப ஏற்பாடு
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் 2026, ஜன.28ல் நடக்கவுள்ள தெப்பத் திருவிழாவுக்காக, தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டு வருகிறது. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தை மாதம் தெப்பத் திருவிழா நடப்பது வழக்கம். இதற்காக ஜி.எஸ்.டி., ரோடு பகுதி தெப்பக்குளத்தின் தண்ணீரில் மிதவை தெப்பம் அமைத்து, சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை எழுந்தருள்வர். பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தெப்பக்குளத்திற்குள் காலை, மாலை தலா 3 சுற்றுக்கள் சுற்றி வரும். தெப்பக்குளத்தில் தண்ணீர் இல்லாதபோது நிரப்புவதற்காக கோயில் சார்பில் பல ஆண்டு களுக்கு முன்பு தெப்பக் குளம் கரையில் ஆழ் குழாய் அமைக்கப்பட்டது. அங்கிருந்து சில நாட்களாக தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. ஏற்கனவே சிறிதளவு கிடந்த ஏராளமான செடிகள் வளர்ந்துள்ளன. அவற்றை அப்புறப்படுத்தி விட்டு, துாய்மை செய்த பின்பு தண்ணீர் நிரப்பினால் சுகாதாரமாக இருக்கும் என பக்தர்கள் வலியுறுத்து கின்றனர்.