மதுரை: மதுரை மாவட்டத்தில் ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் 35 தானியங்கி மழைமானி, 3 வானிலை நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.மாவட்டத்தின் மழைப் பொழிவை கணக்கிட 22 இடங்களில் மழைமானிகள் உள்ளன. மழை பொழிவின் போது இவற்றை ஊழியர்களே நேரடியாக கண்காணித்து, மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல்களை அளிக்கின்றனர். தற்போது வானிலை ஆய்வு மையத்தின் சார்பில் மாநில அளவில் பிர்காவிற்கு ஒன்று என்கிற ரீதியில் மழை அளவை கணக்கிட தானியங்கி மழைமானிகளை அமைத்து வருகின்றனர். இவை 'சென்சார்' தொழில் நுட்பத்தில் இயங்கும். பதிவுகள் துல்லியமானதாக, மாவட்ட மற்றும் மாநில உயரதிகாரிகளும் நேரடியாக கண்காணிக்கும் வகையிலும் இருக்கும்.இதனை மதுரை மாவட்டத்தில் 35 இடங்களில் புதிதாக அமைத்து வருகின்றனர். சத்யமங்கலம் வி.ஏ.ஓ., அலுவலகம், கள்ளந்திரி வருவாய் ஆய்வாளர் அலுவலகம், குன்னத்துார், நாகமலைபுதுக்கோட்டை, பாலமேடு, பண்ணைக்குடி. தனிச்சியம், அயன்தென்கரை, குலசேகரன்கோட்டை, கச்சைக்கட்டி, மேலுார், வெள்ளலுார், திருவாதவூர், கொட்டாம்பட்டி, கருங்காலக்குடி, மேலவளவு, உசிலம்பட்டியில் ஆர்.டி.ஓ., அலுவலகம், ஆர்.ஐ., அலுவலகம், சிந்துபட்டி, உத்தப்பநாயக்கனுார், நிலையூர், வலையங்குளம், திருமங்கலம். ஏ.கொக்குளம், தங்கலாச்சேரி, பேரையூர், மோதகம், விட்டில்பட்டி, டி.கல்லுப்பட்டி, எழுமலை, அதிகாரிபட்டி, கள்ளிக்குடி, சிவரக்கோட்டை, குராயூர், கல்லாணையில் அமைக்கப்பட்டு வருகிறது.அதேபோல வானிலை நிலையங்கள் வாடிப்பட்டி, திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகங்கள், அலங்காநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளியில் அமைய உள்ளது. தற்போது கட்டமைப்பு பணிகளை துவக்கியுள்ள தனியார் நிறுவனம், அதற்கு வேலியிடும் பணியை மேற்கொள்ள உள்ளது. மழைமானி ஒவ்வொன்றும் ரூ. 20 ஆயிரம் மதிப்பிலும், வானிலை நிலையங்கள் மொத்தம் ரூ.2.5 லட்சம் மதிப்பிலும் நடக்க உள்ளது.இதுகுறித்து கலெக்டர் சங்கீதா தலைமையில் வாராந்திர ஆலோசனை கூட்டம் தாசில்தார் பிரபாகரன் உள்பட அதிகாரிகளுடன் நடந்து வருகிறது. இப்பணிகளை ஏப்.,1க்குள் முடிக்க திட்டமிட்டுள்ளனர்.