| ADDED : நவ 22, 2025 04:30 AM
உசிலம்பட்டி: எழுமலை அருகே மதுரை- -- தேனி மாவட்டங்களை இணைக்கும் மல்லப்புரம் - மயிலாடும்பாறை ரோடு 8 கி.மீ., நீளமான மலைப்பாதையாக உள்ளது. இதில் போக்குவரத்து அனுமதிப்பதன் மூலம் 30 கி.மீ., துாரமும், நேரமும் குறையும். வனத்துறை அனுமதி கிடைக்காமல் பொது போக்குவரத்துக்கு திறக்கப்படவில்லை. லோடு வேன்கள், டூவீலரில் அனுமதியின்றி போக்குவரத்து நடந்தது. சாம்பல்நிற அணில்களின் சரணாலயமாக அறிவிக்கப்பட்டிருந்த மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் வரும் இந்த வனப்பகுதியை சமீபத்தில் புலிகள் சரணாலயமாகவும் அறிவித்துள்ளனர். இதனால் சிறிய ரக வாகனங்களும் செல்ல கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்த வனத்துறையினர், ரோட்டை சீரமைக்கும் பணிகளையும் நிறுத்திக் கொண்டனர். பராமரிப்பின்றி ரோடு பள்ளமும், மேடுமாக மாறியுள்ளது. இதனால் தேனி மாவட்டத்திலிருந்து சிறிய வாகனங்களில் விவசாய பொருட்களுடன் வரும் விவசாயிகளும், மாணவர்களும் சிரமப்படுகின்றனர். இந்த ரோட்டை சீரமைத்து பொது போக்குவரத்து வசதி ஏற்படுத்தித்தரக்கோரி அப்பகுதி கிராம மக்கள் உசிலம்பட்டி சப்கலெக்டர் உட்கர்ஷ்குமாரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்.