| ADDED : ஜன 27, 2024 05:36 AM
மதுரை : ''ரியல் எஸ்டேட் துறையில் முதலீடு செய்வது பாதுகாப்பானது,'' என, தினமலர் நாளிதழில் கட்டுரைகள் எழுதும் பொருளாதார நிபுணர் மும்பை சேதுராமன் சாத்தப்பன் 'கிரடாய்' சார்பில் மதுரை தமுக்கம் மைதானத்தில் நடக்கும் வீடு, மனைகள் விற்பனை கண்காட்சியில் பேசினார்.'ரியல் எஸ்டேட் முதலீடு 2024' என்ற தலைப்பில் சேதுராமன் சாத்தப்பன் பேசியதாவது: இந்தியாவில் ரியல் எஸ்டேட் துறையில் 51 சதவீதம் முதலீடு செய்யப்படுகிறது. அடுத்ததாக தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். தங்கத்தையும், இந்தியர்களையும் பிரிக்க முடியாது. இந்தியர்களிடம் 20 ஆயிரம் டன் தங்கம் உள்ளது. இதில் ஒரு டன் தங்கம் கூட நாம் உற்பத்தி செய்வதில்லை. இறக்குமதி தங்கம் தான். ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்வது பாதுகாப்பானது. இதில் இந்தியாவில் சந்தை மதிப்பு ரூ.27 லட்சம் கோடி. வெளிநாடுகளிலிருந்து ரூ.32 ஆயிரம் கோடி ரியல் எஸ்டேட்டில் 2023ல் முதலீடு செய்யப்பட்டுள்ளது.முன்பு 45 வயதிற்கு மேல் தான் வீடு, நிலம் வாங்குவர். 2000 க்கு பின் தகவல் தொழில்நுட்பத்துறை வளர்ச்சியால் கணவன், மனைவி பணிபுரிகின்றனர். இதனால் 25 முதல் 30 வயதிற்குள் வீடுகள் வாங்குகின்றனர்.கடன் வாங்கி வீடு வாங்குவது நல்ல முடிவு. இதில் இரும்பு, மரம், இதர தளவாடங்கள் பயன்பாடு, வேலைவாய்ப்பால் வீட்டுக்கடன் வழங்குவதை அரசு ஊக்குவிக்கிறது. கடன் பெறுவோருக்கு வரிச்சலுகை கிடைக்கிறது. வீட்டுக்கடன் பெற வயது வரம்பு தடையில்லை. 'சிபில் ஸ்கோரை' நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். அதில் சிறு தவறு நடந்தாலும் கடன் கிடைக்க வாய்ப்பில்லை.வீடு, இடம் வாங்குவதில் சரியான திட்டமிடல், விசாரணை தேவை. முதலீடு செய்வதற்கு முன் நேரடியாக கள ஆய்வு செய்வது முக்கியம். வீடு மற்றும் அதிலுள்ள பொருட்களுக்கு இன்சூரன்ஸ் செய்வது அவசியம். கடன் வாங்கி வீடுகள் மீது முதலீடு செய்ய வேண்டும்.உபரி பணத்தை மியூச்சுவல் பண்ட், தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டும். இளைஞர்கள் சம்பளத்தில் 20 முதல் 30 சதவீதம் சேமிக்க வேண்டும்.குறைந்த வட்டிக்கு யார் கடன் தருகின்றனரோ அவர்களிடம் நிறுவனங்கள் தங்கள் சொத்து மதிப்பில் 2 மடங்கு கடன் வாங்கலாம். நான்கு அல்லது 5 மடங்கு கடன் வாங்கி அகலக்கால் வைக்கக்கூடாது என்றார்.