சமூகவலைத்தளத்தில் தவறான தகவல் பகிர்வு குற்றமே வர்த்தக சங்க கருத்தரங்கில் தகவல்
மதுரை: மதுரை சவுராஷ்டிரா சேம்பர் ஆப் காமர்ஸ் சார்பில் 'சைபர் கிரைம்' குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.தலைவர் தினேஷ் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் குமரேஷ்பாபு, செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திகுமரன், விக்னேஷ்பாபு, சவுராஷ்டிரா சமூகநலப்பேரவை தலைவர் எஸ்.கே.ஆர்.ரமேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.போலீசார் பேசியதாவது: இந்தாண்டு மட்டும் 2500 குற்றங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணமோசடி குற்றங்கள்தான் பதிவாகி உள்ளது. இதுபோன்ற பணமோசடி பாதிப்பு ஏற்பட்டால் 24 மணி நேரத்திற்குள் 1930 என்ற எண்ணுக்கு அழைத்தாலோ, அல்லது சைபர் கிரைம் தளத்தின் (www.cybercrime.gov.in) மூலம் புகார் அளித்தாலோ உடனடியாக இழந்த பணத்தை பெறலாம்.வாட்ஸ் ஆப், பேஸ்புக்கில் வரும் தகவல்களை ஆபாசமானதா, சரியானதா என்று பாராமல் பகிர்வதும் ஒரு குற்றமாக கருதப்படும். பேஸ்புக் கில் கணக்கு வைத்திருப்போர் தங்கள் கணக்கை 'லாக்' செய்து வைத்திருக்க வேண்டும். அலைபேசியை பழுதுநீக்க அலைபேசி நிறுவனம் சார்ந்த சென்டர்களில்தான் கொடுக்க வேண்டும். மற்ற இடங்களில் தகவல்கள் திருடுபோக வாய்ப்புள்ளது. போட்டோக்கள் மார்பிங் செய்யப்பட்டு ஒருமுறை வெப்சைட்டில் பதிவேற்றம் ஆகிவிட்டால், அதை தற்காலிகமாக தடுக்கலாமே ஒழிய முழுமையாக ஒழிக்க முடியாது. உங்களை தொடர்பு கொள்பவர் முகமறியா குற்றவாளி என்றால் www.sancharsaathi.gov.inஎன்ற மத்திய அரசின் தளத்தில் புகார் அளிக்கலாம் என்றனர்.