| ADDED : டிச 04, 2025 06:03 AM
மதுரை: தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.,) நவ.4 ல் துவங்கியது. டிச.4 ல் முடிவடைய இருந்த நிலையில், தற்போது டிச.11 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இந்த திருத்தப் பணிகளில் ஈடுபட்ட தேர்தல் அலுவலர்கள் டிச.4 க்குள் எஸ்.ஐ.ஆர்., பணிகளை முடிக்க தீவிரம் காட்டினர். பணிகள் துவங்கி 15 நாட்களுக்குப் பின் ஓட்டுச்சாவடிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதையடுத்து பூத்லெவல் அலுவலர்கள் (பி.எல்.ஓ.,க்கள்) கணக்கீட்டுப் படிவங்கள் விரைவாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, பூர்த்தி செய்த படிவங்களை திரும்பப் பெற்றனர். பின் அவற்றை அதற்கான செயலியில் பதிவேற்றம் செய்தனர். இவ்வகையில் டிச.4க்குள் 99 சதவீத படிவங்களை வழங்கி திரும்ப பெற்றுவிட்டனர். அதிகாரிகள் கூறுகையில், ''ஒரு மாத காலத்திற்குள் பணிகளை முடிக்க தேர்தல் கமிஷன் அதிகாரிகளை முடுக்கி விட்டது. அதன்படி பணிகளை ஏறக்குறைய முடித்துவிட்டோம். இன்னும் ஒரு வார கால அவகாசம் உள்ளது. அதற்குள் அனைத்துப் பணிகளும் முடிந்து, டிச.,16க்கு பின் படிவங்கள் வழங்கி சேர்க்கை, நீக்கம், திருத்தம் நடைபெறும்'' என்றனர். வாக்காளர் பட்டியலில் ஓட்டுகள் நீக்கம் பரவலாக உள்ளது எனவும் பலர் புகார் தெரிவித்தனர். வருவாய்த்துறை அலுவலர்கள் சிலர் கூறுகையில், ''தொகுதிக்கு 20 சதவீதம் அளவுக்கு ஓட்டுகள் விடுபட்டு இருக்கலாம். மதுரை மாவட்டத்தில் 27 லட்சம் ஓட்டுகள் உள்ளன. இதில் இறந்தவர்கள், தொகுதி மாறியவர்கள், நீக்கப்பட்டவர்கள் என்ற வகையில் 4 முதல் 5 லட்சம் ஓட்டுகள் விடுபட்டு இருக்கலாம்'' என்றனர்.