| ADDED : மார் 14, 2024 04:18 AM
கொட்டாம்பட்டி: அய்வத்தாம்பட்டியில் நெடுஞ்சாலைத் துறையினர் ரோடு அமைக்காததால் மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிப்பு என பொதுமக்களின் குற்றச்சாட்டு.கம்பூர் ஊராட்சி அய்வத்தாம்பட்டியில் 1,800 க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். கருங்காலக்குடியில் இருந்து கம்பூர் செல்லும் ரோட்டில் இருந்து 3 கி.மீ., தொலைவில் அய்வத்தாம்பட்டி, குறிஞ்சிநகர் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இப் பகுதியில் ரோடு அமைத்து 10 வருடங்களுக்கும் மேலாவதால் ரோடு முற்றிலும் சிதிலமடைந்து பொதுமக்கள் ரோட்டில் நடமாட முடியாத நிலையில் உள்ளது.அய்வத்தாம்பட்டி செல்வக்குமார் கூறியதாவது: தார் ரோடு தற்போது ஜல்லிக் கற்களாகவும், மேடு பள்ளமாகவும் மாறிவிட்டது. ஆம்புலன்ஸ் முதல் பள்ளி வாகனங்கள் வரை எதுவுமே வருவதில்லை. மாணவர்களை பெண்கள்தான் 3 கி.மீ., தொலைவில் உள்ள சந்திப்பு பகுதிக்கு வந்து பள்ளிகளுக்கு அனுப்புகின்றனர். ஜல்லிக் கற்களாக மாறிய ரோட்டில் டூவிலரில் செல்வோர் தடுமாறி விழுவதால் காயமடைகின்றனர்.ஆம்புலன்ஸ் வர மறுப்பதால் கர்ப்பிணிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சிரமமாக உள்ளது. உயிரிழப்பு சம்பவங்கள்கூட நடந்துள்ளன. ரோடு அமைக்க வலியுறுத்தி அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் ஆண்டுக்கணக்கில் நடவடிக்கை இல்லை. அதிகாரிகளிடையே மனித நேயம் மரித்து விட்டதோ என்ற அச்சம் எழுகிறது. அதனால் அதிகாரிகளை கண்டித்து நான்கு வழிச்சாலையில் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றார்.நெடுஞ்சாலை உதவி செயற்பொறியாளர் வெங்கடேஷ்பாபு கூறுகையில், ரோடு அமைப்பதற்கு திட்ட மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்பியுள்ளோம். நிதி வந்ததும் சாலை சீரமைக்கப்படும் என்றார்.