உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை /  பேரையூரில் விவசாய தொழிலாளர் பற்றாக்குறை; களையெடுக்க ஆட்கள் இல்லை

 பேரையூரில் விவசாய தொழிலாளர் பற்றாக்குறை; களையெடுக்க ஆட்கள் இல்லை

பேரையூர்: பேரையூர், சிலைமலைப்பட்டி, மோதகம், பாப்பையாபுரம், காடனேரி, குமாரபுரம், டி. கல்லுப்பட்டி, சேடப்பட்டி, சாப்டூர், அத்திபட்டி உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் பருத்தி, சோளம், மக்காச்சோளம் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இவற்றுக்கு இடையே நெட்டிக்குலை, தேங்காய்புல், துயில்கீரை, வெஞ்சா, கோரைப்புல், மத்தங்காபுல், பனிப்புல் உள்ளிட்ட களைச் செடிகளும் வளர்ந்து வருகின்றன. இவை மகசூல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் அவற்றை அகற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலத்தில் சாகுபடி செய்துள்ள சிறு விவசாயிகள் குடும்பத்துடன் வயலில் இறங்கி களைகளை அகற்றி வருகின்றனர். இரண்டு ஏக்கருக்கு மேல் பயிர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் கூலித்தொழிலாளர்களை பணியில் அமர்த்தி களைகளை அகற்றுகின்றனர். மழை பொழிவைத் தொடர்ந்து தாலுகா முழுவதும் விவசாய பணிகள் நடப்பதால் களைகளை அகற்ற விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. சிலர் வெளியூரில் இருந்தும் பெண் தொழிலாளர்களை அழைத்து வந்து களைகளை அகற்றி வருகின்றனர். இவர்களுக்கு அதிக கூலி கொடுக்க வேண்டியுள்ளதால் கூடுதல் செலவு ஏற்படுகிறது. விவசாயிகள் கூறுகையில், ''பயிர்களின் ஊடே வளர்ந்துள்ள களைகளை எடுக்க விவசாயக் கூலி ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. காலை 9:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை களை எடுக்கின்றனர். சம்பளமாக ரூ.300 கொடுக்கிறோம். வெளியூர்களில் இருந்து ஆட்களை அழைத்து வந்தால் கூடுதல் செலவு ஆகிறது'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ