| ADDED : டிச 04, 2025 06:06 AM
உசிலம்பட்டி: உசிலம்பட்டி அருகே டி.குன்னுாத்துப்பட்டி பகுதியில் நவ.15ல், மின்வாரிய அதிகாரிகள் மின் திருட்டு குறித்து திடீர் சோதனை மேற்கொண்டனர். உரிய அனுமதி பெறாமல் கூடுதல் திறன் கொண்ட மோட்டார் பயன்படுத்தியவர்களுக்கு அபராதம் விதித்தனர். இதனை ஏற்று பலர் அபராதம் செலுத்தினர். அபராதம் விதித்த நுகர்வோர்களுக்கு கூடுதல் வாய்ப்பளிக்க டிச. 1ல், உசிலம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் உதவிப்பொறியாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் விசாரணை நடந்தது. அவர்களுடன் வந்த அன்பழகன் உட்பட சிலர், அபராதம் விதித்த மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மீது வழக்கு தொடர்ந்து சிறைத்தண்டனை வாங்கிக் கொடுப்போம் என மிரட்டியுள்ளனர். இதையடுத்து மின்வாரிய அலுவலக நடைமுறையை களங்கப்படுத்தியது, நேரடி விசாரணையின் போது மிரட்டுவது, விசாரணை அதிகாரி பெயரைக் குறிப்பிட்டு போஸ்டர் ஒட்டி, பணிகளைச் செய்யவிடாமல் தடுப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உதவிப்பொறியாளர் ரவிச்சந்திரன் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.