உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / மதுரை / பராமரிக்காத சொத்துக்கள் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிப்பு!

பராமரிக்காத சொத்துக்கள் போலி ஆவணங்கள் மூலம் ஆக்கிரமிப்பு!

உசிலம்பட்டி டாக்டர் பிரபாகர் 59. இவர் மதுரை எல்லீஸ்நகர் கென்னட் ரோட்டில் காலி மனையிடத்தை 2006 ல் வாங்கி தொடர்ந்து பராமரித்து வருகிறார். யாரும் ஆக்கிரமிக்கக்கூடாது என்பதற்காக கம்பி வேலியும் அமைத்துள்ளார்.மதுரை வரும்போது அவ்வப்போது காலி மனையை பார்த்துவிட்டு செல்வார். தவிர இவரது உறவினர் சரத்குமாரும் அடிக்கடி சென்று இடத்தை கண்காணித்து வந்தார். இந்நிலையில் பிரபாகர் இடத்தின் கம்பி வேலியை பிரித்துவிட்டு சிலர் மண் அள்ளும் இயந்திரம் மூலம் சுத்தப்படுத்திக் கொண்டிருந்தனர். அவ்வழியே வந்த சரத்குமார் சந்தேகப்பட்டு விசாரித்தபோது ஆக்கிரமிக்க திட்டமிட்டிருந்தது தெரிந்தது.இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி போலீசில் பிரபாகர் புகார் செய்தார். வண்டியூர் கண்ணன் 57, என்பவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதேபோல் கடந்த ஏப்ரலில் சூர்யா நகர் மீனாட்சி நகரில் ஓய்வுபெற்ற குடிநீர் வடிகால் வாரிய ஊழியரின் 5 சென்ட் இடம் ஆக்கிரமிக்கப்பட்டது தொடர்பாக சிலர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.போலீசார் கூறியதாவது: தங்களின் எதிர்கால வாழ்க்கைக்கு உதவும் என்பதற்காக பலர் நிலம், வீட்டடி மனை வாங்கி சொத்து சேர்க்கின்றனர். தொடர்ந்து பராமரிக்காத பட்சத்தில் சிலர் ஆக்கிரமிக்க துவங்கி விடுகின்றனர். போலி ஆவணங்கள் மூலம் விற்றும் விடுகின்றனர். அல்லது தங்களுக்கு அந்த இடத்தை குறைந்த விலைக்கு தருமாறு மிரட்டி வாங்கிவிடுகின்றனர். இதற்கு அரசியல்வாதிகளின் ஆதரவும் உண்டு. மதுரையை மையமாக வைத்து எடுத்த ரஜினி முருகன் படத்தில் சமுத்திரகனி ஆக்கிரமிப்பாளர் கேரக்டரில் நடித்திருப்பார். அந்த கேரக்டர் போன்றவர்களுக்கு இதுதான் தொழிலே. அவர்களிடம் உயர் பதவியில் உள்ளவர்கள், டாக்டர்கள், வக்கீல்கள் போன்றவர்கள் தங்கள் 'பவரை' காட்டி ஆக்கிமிரப்பில் இருந்து தங்கள் இடத்தை காத்துக்கொள்கின்றனர். சொத்து வாங்கியவர்கள் தங்கள் இடம் என்பதை தெரியப்படுத்தும் வகையில் பெயர் பலகை வைக்க வேண்டும்.வாரம் ஒருநாள் கட்டாயம் நேரில் சென்று கண்காணிக்க வேண்டும். புறநகர் பகுதி என்றால் அப்பகுதியில் உள்ள நண்பர், உறவினர் மூலம் கண்காணிக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை