| ADDED : ஜன 08, 2024 11:51 PM
மதுரை : திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் சட்டவிரோதமாக மது, லாட்டரி, குட்கா விற்பனை குறித்து 'தினமலர்' நாளிதழ் செய்தி அடிப்படையில் தாக்கலான வழக்கில் தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.மதுரை சோலையழகுபுரம் மணிகண்டன் தாக்கல் செய்த பொதுநல மனு: நத்தம் பகுதியில் சட்டவிரோதமாக மது, லாட்டரி, குட்கா விற்பனை செய்யப்படுகிறது. சிலர் போதையில் தள்ளாடியவாறு ரோட்டில் படுத்துக் கொள்கின்றனர். ஆபாசமாக பேசுகின்றனர். போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுகிறது. இதுகுறித்து 2023 மார்ச் 16, ஜூன் 25, நவ.,17, நவ.,24 ல் 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. திண்டுக்கல் கலெக்டர், எஸ்.பி.,நத்தம் இன்ஸ்பெக்டருக்கு புகார் அனுப்பினேன். நடவடிக்கை இல்லை. சட்டவிரோதமாக மது, லாட்டரி, குட்கா விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.நீதிபதிகள் டி.கிருஷ்ணகுமார், ஆர்.விஜயகுமார் அமர்வு விசாரித்தது.அரசு தரப்பு: சம்பந்தப்பட்டோர் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சில கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தது.நீதிபதிகள்: சட்டவிரோதமாக மது, லாட்டரி, குட்கா விற்பனை செய்வதை தடுக்க மேற்கொண்ட நடவடிக்கை குறித்து கலெக்டர், எஸ்.பி., இரண்டு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.