மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் பெறுவதற்கு மாற்றம் வருமா... ஏமாற்றம் தொடருமா... மருத்துவமனைகளில் தொடர் அலைக்கழிப்பு
மதுரை: கல்லுாரிப்படிப்பிற்காக ஊனத்தின் தன்மை குறித்து சான்றிதழ் பெற உசிலம்பட்டியில் உள்ள சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்திற்கும், மதுரை அரசு மருத்துவமனைக்கும் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.மதுரை அரசு மருத்துவமனையில் ஒரு டாக்டர் மருத்துவக் குழுவானது கண் வார்டு அருகிலுள்ள 114 வது வார்டில் (பழைய வார்டு 1ஏ) வாரத்தில் திங்கள், வியாழனில் காலை 9:00 முதல் மதியம் ஒரு மணி வரை செயல்படுகிறது. இதில் காதுகேளாமை, வாய் பேசாமை, பார்வை குறைபாடு, மூளை வளர்ச்சி குறைபாடு, கை, கால் இழப்பு அல்லது குறைபாடு ஏற்பட்டால் ஊனத்தின் அளவைப் பொறுத்து சான்றிதழ் வழங்கப்படுகிறது.ஏற்கனவே சான்றிதழ் இருந்தாலும் யு.டி.ஐ.டி., எண் வைத்திருந்தாலும் தனக்கு எத்தனை சதவீதம் ஊனம் உள்ளது என்பதை ஆய்வு செய்து சான்றிதழ் பெறலாம். கல்வி, வேலைவாய்ப்பு சலுகை, உதவித்தொகை, போக்குவரத்து கட்டண சலுகை பெற இச்சான்றிதழ் உதவும். வசதியில்லா மூவர் குழு
சில கல்வி நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகளின் ஊனத்தின் தன்மையை அளவிடும் வகையில் மாவட்ட மருத்துவ குழு மூலம் சான்றிதழ் பெற பரிந்துரைக்கிறது. இக்குழு உசிலம்பட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள சுகாதார இணை இயக்குநர் அலுவலகத்தில் வாரத்தில் திங்களன்று செயல்படுகிறது. இதில் மூன்று டாக்டர்கள் அடங்கிய குழுவினர் பரிசோதித்து சான்றிதழ் வழங்குவர். சந்தேகம் இருந்தாலோ கூடுதல் பரிசோதனை செய்ய வேண்டும் என்றாலோ மதுரை அரசு மருத்துவமனையில் உள்ள மண்டல மருத்துவ குழுவிற்கு பரிந்துரைக்கின்றனர்.உசிலம்பட்டி மாவட்ட மருத்துவ குழுவில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும் நியூராலஜி, வாஸ்குலர் சர்ஜரி, பிளாஸ்டிக் சர்ஜன், யூராலஜி, நெப்ராலஜி போன்ற துறைசார்ந்த சிறப்பு நிபுணர்கள் இல்லை. மேலும் செவித்திறன் பரிசோதனைக்கான 'பெரா' கருவி உட்பட பல்வேறு கருவிகள் இல்லை. இந்த பரிசோதனைகளுக்காக மண்டல மருத்துவ குழுவிற்கு தபால் மூலம் மாவட்ட குழு பரிந்துரைக்கிறது. மதுரை அரசு மருத்துவமனைக்கு தபால் கிடைக்க 2 முதல் 3 நாட்கள் தாமதமாகிறது. வாரத்தில் ஒருநாள் தான் மண்டல மருத்துவ குழு செயல்படும் என்பதால் மீண்டும் அடுத்தவாரம் வரை சான்றிதழுக்காக காத்திருக்க வேண்டியுள்ளது. சிலநேரங்களில் முழுமையற்ற தகவலால் உசிலம்பட்டிக்கும், மதுரைக்கும் மாற்றுத்திறனாளிகள் அலைக்கழிக்கப்படுகின்றனர்.மாவட்ட மருத்துவக்குழுவும், மண்டல மருத்துவக்குழுவும் ஒரே நாளில் செயல்பட வேண்டும். தபால் மூலம் அனுப்பும் நடைமுறைக்கு பதில் இமெயில், வாட்ஸ் ஆப் மூலம் அடுத்தகட்ட பரிசோதனை குறித்த தகவல்களை மண்டல குழுவுக்கு அனுப்ப வேண்டும். இதன் மூலம் வாரக்கணக்கில் மாற்றுத்திறனாளிகள் சான்றிதழுக்காக அலைவதை தடுக்க முடியும்.