உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாகப்பட்டினம் /  டிஜிட்டல் கணக்கெடுப்பு வேண்டாம்; நாகையில் விவசாயிகள் போராட்டம்

 டிஜிட்டல் கணக்கெடுப்பு வேண்டாம்; நாகையில் விவசாயிகள் போராட்டம்

நாகப்பட்டினம்: நாகையில், அழுகிய பயிர்களை டிஜிட்டல் முறையில் கணக்கெடுப்பு நடத்துவதை தமிழக அரசு உடனடியாக நிறுத்த வேண்டும் என, வாயில் துணியை கட்டி, அழுகிய பயிர்களுடன், கலெக்டர் அலுவலக வளாகத்தில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வடகிழக்கு பருவமழை தீவிரம் மற்றும் வங்க கடலில் உருவான 'டிட்வா' புயல் காரணமாக, நாகை மாவட்டம் முழுதும் கனமழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாகுபடி செய்யப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள், வெள்ள நீரால் வயல்களில் மூழ்கின. விளை நிலங்களில் மழைநீர் வடியாமல் தேங்கி, 60,000 ஏக்கரில் இளம் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடும் நீரால், வாய்க்கால்களில் தண்ணீர் வடிய முடியாமல் எதிர்த்து திரும்பியது. இதனால் முழுதுமாக பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. பாதிப்பு பகுதிகளை 'டிஜிட்டல்' முறையில் கணக்கெடுக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க மாநில கொள்கை பரப்பு செயலர் தமிழ்செல்வன் தலைமையில், 20 பெண்கள் உட்பட 50க்கும் மேற்பட்ட விவசாயிகள், நாகை கலெக்டர் அலுவலக வளாகத்தில், வாயில் துணியை கட்டி, அழுகிய பயிர்களுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகள் கூறுகையில், 'டிஜிட்டல் கணக்கெடுப்பு முறையை உடனே கைவிட வேண்டும். கணக்கெடுக்க வரும் அனுபவமில்லாத வேளாண் அலுவலர்கள், சாலையோரம் உள்ள விளை நிலங்களை மட்டுமே கணக்கெடுக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர் பதிவேட்டின் அடிப்படையில், வேளாண் அலுவலர்கள், வருவாய் துறையினரோடு இணைந்து முறைகேடுகளுக்கு இடம் அளிக்காமல் கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி