உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / நாமக்கல் லோக்சபாவில் 2வது முறையாக வெற்றிபெற்ற கொ.ம.தே.க., உற்சாகம்

நாமக்கல் லோக்சபாவில் 2வது முறையாக வெற்றிபெற்ற கொ.ம.தே.க., உற்சாகம்

நாமக்கல் : நாமக்கல் மாவட்டத்தில், ராசிபுரம், திருச்செங்கோடு என, இரண்டு லோக்சபா தொகுதிகள் இருந்தன. அதில், ராசிபுரம் லோக்சபா தொகுதியில், 1977 முதல் தொடர்ந்து, ஐந்து முறை காங்., வெற்றி பெற்றது. அ.தி.மு.க., இர ண்டு முறை, த.மா.கா., ஒருமுறை, கடைசியாக, 2004ல் நடந்த தேர்தலில், காங்., வெற்றி பெற்றது.அதேபோல், திருச்செங்கோடு லோக்சபா தொகுதியில், 1951 முதல், 2004 வரை நடந்த, 14 தேர்தலில், தி.மு.க.,-5 முறை, அ.தி.மு.க.,-5 முறை, காங்.,-2 முறை, ம.தி.மு.க., சுயே., தலா, ஒரு முறை வெற்றி பெற்றன. இந்நிலையில், தொகுதி மறுசீரமைப்புக்கு பின், ராசிபுரம், திருச்செங்கோடு தொகுதிகள் மாற்றப்பட்டு, நாமக்கல் லோக்சபா தொகுதி உருவானது. அதன்படி, நாமக்கல் லோக்சபா தொகுதியில், ராசிபுரம் (எஸ்.சி.,), சேந்தமங்கலம் (எஸ்.டி.,), நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு, சங்ககிரி (சேலம் மாவட்டம்) என, ஆறு சட்டசபை தொகுதிகள் அடங்கி உள்ளன.அதை தொடர்ந்து, 2009ல் நடந்த லோக்சபா தேர்தலில், தி.மு.க., சார்பில், காந்திச்செல்வன், 2014ல், அ.தி.மு.க., வேட்பாளர் சுந்தரம், 2019ல் தி.மு.க., கூட்டணியில், கொ.ம.தே.க., வேட்பாளர் சின்ராஜ் ஆகியோர் வெற்றி பெற்றனர். தற்போது நடந்த லோக்சபா தேர்தலில், சங்ககிரி, ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், ப.வேலுார், திருச்செங்கோடு ஆகிய, ஆறு சட்டசபை தொகுதியில், உள்ள, 14 லட்சத்து, 52,562 வாக்காளர்களில், கடந்த ஏப்., 19ல் நடந்த தேர்தலில், 11 லட்சத்து, 36,069 பேர் ஓட்டளித்தனர். இதையடுத்து, நேற்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில், முதல் சுற்றில், அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்மணி, 1,089 ஓட்டுகள் முன்னிலை பெற்றார். அதை தொடர்ந்து, அனைத்து சுற்றிலும் கொ.ம.தே.க., வேட்பாளர் மாதேஸ்வரன் முன்னிலை பெற்று, இறுதியில் வெற்றி பெற்றார். இந்த வெற்றி மூலம், நாமக்கல் லோக்சபா தொகுதியை, தி.மு.க., கூட்டணியில் இடம்பிடித்த கொ.ம.தே.க., மீண்டும் வெற்றி பெற்று, தொகுதியை தக்கவைத்து கொண்டது. தி.மு.க., கூட்டணி வெற்றி பெற்றதை அடுத்து, தி.மு.க., - கொ.ம.தே.க., - வி.சி., - ம.தி.மு.க., - உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும், வெற்றியை உற்சாகமாக கொண்டாடினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை