உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / நாமக்கல் / கந்து வட்டியால் ரியல் எஸ்டேட் புரோக்கர் விபரீதம் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

கந்து வட்டியால் ரியல் எஸ்டேட் புரோக்கர் விபரீதம் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் சாலை மறியல்

ப.வேலுார்:கந்து வட்டி கொடுமை தாங்காமல், வீடியோ வெளியிட்டு ரியல் எஸ்டேட் புரோக்கர் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமான குற்றவாளிகளை கைது செய்யும் வரை, உடலை வாங்க மாட்டோம் என, உறவினர்கள் தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.நாமக்கல் மாவட்டம், ப.வேலுார் அருகே, பொய்யேரியை சேர்ந்தவர் மணிகண்டன், 42; ரியல் எஸ்டேட் புரோக்கர். மனைவி அகிலாண்டேஸ்வரி, 39; மாற்றுத்திறனாளி. தம்பதியருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். மணிகண்டன், கடந்த, ஆறு மாதத்துக்கு முன், நன்செய் இடையாறை சேர்ந்த சோமசுந்தரம், லட்சுமி தம்பதியரிடம், மூன்று லட்சம் ரூபாயை, வட்டிக்கு கடன் வாங்கி உள்ளார். சில மாதங்களாக வட்டி, அசலை செலுத்த முடியாமல், மணிகண்டன் இருந்துள்ளார். இதனால், நேற்று முன்தினம் மாலை, மணிகண்டன் வீட்டுக்கு சென்ற சோமசுந்தரம், லட்சுமி தம்பதியர், 'மூன்று லட்சம் ரூபாய்க்கு வட்டி, அசல் சேர்த்து, 15 லட்சம் ரூபாய் தர வேண்டும்' என, மிரட்டல் விடுத்துள்ளனர்.இதனால் அதிர்ச்சியடைந்த மணிகண்டன், அன்று இரவு, 'கந்துவட்டி கொடுமையால் என் வீட்டையும், பணத்தையும் வெகுவாக இழந்து விட்டேன். பணம் கேட்டு தொந்தரவு செய்வதால், என் மனைவி, மகன், மகளை விட்டு பிரிகிறேன்' என, உருக்கமாக பேசி வீடியோ வெளியிட்டார். பின், வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து புகார்படி, ப.வேலுார் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ப.வேலுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.இந்நிலையில், நேற்று மதியம், 2:00 மணிக்கு, மணிகண்டனை தற்கொலைக்கு துாண்டிய, சோமசுந்தரம், இவரது மனைவி லட்சுமி மற்றும் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த முருகன், சுரேஷ் ஆகிய நால்வரையும் கைது செய்ய வேண்டும் எனக்கூறி, போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். தொடர்ந்து, மாலை, 3:00 மணிக்கு, ப.வேலுார் அண்ணாதுரை சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.ப.வேலுார் டி.எஸ்.பி., சங்கீதா, இன்ஸ்பெக்டர் ரங்கசாமி ஆகியோர், குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதி அளித்ததையடுத்து, சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். ஆனால், குற்றவாளிகளை கைது செய்யும் வரை, உடலை வாங்க மாட்டோம் என, உறவினர்கள் தெரிவித்ததால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ