சென்னை: 'நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனை, அதே இடத்தில் தொடர்ந்து செயல்பட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.அவரது அறிக்கை: நாகப்பட்டினம் நகரில், அரசு தலைமை மருத்துவமனை, 100 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வந்தது. தினமும், 1,000த்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வந்தனர். மருத்துவமனையை இடமாற்றம் செய்ய தி.மு.க., முயல்வதை அறிந்து, மாவட்ட பா.ஜ.,வினர், 2023 மே மாதம் போராட்டம் நடத்தினர். இதனால், தி.மு.க., அரசு தொடர்ந்த வழக்கை, இன்றும் பா.ஜ.,வினர் எதிர்கொண்டு வருகின்றனர். நாகை அரசு தலைமை மருத்துவ மனையை இடம் மாற்றக்கூடாது என்று, பொதுமக்களும் கோரிக்கை வைத்தனர்; போராட்டங்களையும் நடத்தினர். பொதுமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி, நாகை நகரில் இருந்து, 15 கி.மீ., தொலைவில் உள்ள ஒரத்துார் அரசு மருத்துவ கல்லுாரிக்கு, முழுமையாக மருத்துவமனை மாற்றப்பட்டுள்ளது. இதனால், பல லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஒரத்துாரில் உள்ள மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு போதுமான பஸ்வசதியோ, சாலை வசதிகளோ ஏற்படுத்தப்படவில்லை. அவசர கால சிகிச்சை, மகப்பேறு சிகிச்சை பெற, 15 கி.மீ., பயணிப்பது முற்றிலும் கடினமானது. எனவே, நாகப்பட்டினம் அரசு தலைமை மருத்துவமனை, மீண்டும் அனைத்து விதமான மருத்துவ சேவைகள், தரமான கட்டமைப்புடன் அதே இடத்தில் தொடர்ந்து செயல்பட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.